Share on Social Media


சோமனுார்:கடந்த ஆறு ஆண்டுகளாக புதிய ஒப்பந்த கூலி உயர்வு வழங்கப்படாததாலும், இடைத்தேர்தலின்போது முதல்வர் அறிவித்த 65 கோடி ரூபாய் கடன் தள்ளுபடி செய்யப்படாததாலும், கூலிக்கு நெசவு செய்யும்விசைத்தறியாளர்கள் விரக்தி அடைந்துள்ளனர்.
தமிழகத்தில், மொத்தம், 6 லட்சம் விசைத்தறிகள் உள்ளன. அதில், திருப்பூர், கோவை மாவட்டங்களில் மட்டும், சுமார் 2.50 லட்சம் விசைத்தறிகள் இயங்கி வருகின்றன. இங்கு உற்பத்தியாகும் காடா துணி ரகங்கள், பெருமளவில் வடமாநிலங்களுக்கு அனுப்பப்படுகின்றன. இரு மாவட்டங்களில் உள்ள, 95 சதவீதம் விசைத்தறிகள் கூலியின் அடிப்படையில் இயக்கப்படுகின்றன.
கடந்த ஆறு ஆண்டுகளுக்கு மேலாக, ஜவுளி உற்பத்தியாளர்களுடன், கூலி உயர்வு குறித்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்படவில்லை. உயர்த்தி வழங்குவதாக அறிவித்த கூலியும், இதுவரை வழங்கப்படவில்லை. இதனால், வருவாய் இன்றி, வங்கிகளிலும் தனியாரிடமும் கடன் வாங்கி, தொழில் செய்யும் நிலைக்கு, விசைத்தறியாளர்கள் தள்ளப்பட்டனர். கடன் சுமை நாளுக்கு நாள் அதிகரித்து, வங்கிக் கடனை திருப்பிச் செலுத்த முடியாமல், வீடுகளை, விசைத்தறிகளை இழக்கும் நிலை விசைத்தறியாளர்களுக்கு ஏற்பட்டுள்ளது. கடந்த, ஐந்து ஆண்டுகளாக, விசைத்தறி தொழிலில் உள்ள பிரச்னைகளைத் தீர்க்க, அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்ற ஆதங்கம், விசைத்தறியாளர்களிடம் உள்ளது.
இதுகுறித்து கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறியாளர்கள் கூறியதாவது:மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை ஜவுளி உற்பத்தியாளர்களுடன் ஒப்பந்தம் மேற்கொண்டு, கூலி உயர்வு பெற்று வந்தோம். கடைசியாக, 2014ல் ஒப்பந்தம் போட்டோம். ஆனால், அதன்படி கூலி கிடைக்கவில்லை. மூன்றாண்டுகள் முடிந்துவிட்டது. சரி, புதிய கூலி உயர்வு கேட்போம் என, முடிவு செய்தோம். பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்யக் கூட அரசு ஒத்துழைக்கவில்லை. இப்படியே ஆறு ஆண்டுகள் கடந்துவிட்டன.
சூலுார் இடைத்தேர்தலின்போது, ரூ. 65 கோடி வங்கி கடன் தள்ளுபடி செய்யப்படும் என்ற அறிவிப்பால் மகிழ்ச்சி அடைந்தோம். தொடர்ந்து, கொரோனா ஊரடங்கால், மேலும் இக்கட்டான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.தற்போது, வங்கிகளில் ஆண்டு கணக்கு முடிவு காரணமாக, கடன் நிலுவைக்காக ஜப்தி, ஏலம் உள்ளிட்ட நடவடிக்கைகளை வங்கி நிர்வாகங்கள் முன்னெடுத்துள்ளன.
இது, விசைத்தறியாளர்களை மேலும் நிலைகுலையச் செய்துள்ளது.விசைத்தறியாளர்கள் வங்கிகளில் பெற்ற 65 கோடி ரூபாய் கடன் தள்ளுபடி செய்யப்படும் என முதல்வர் வாக்குறுதி அறிவித்திருந்தார். ஆனால், சொன்னபடி தள்ளுபடி செய்யவில்லை. அந்நிய முதலீடுகளை ஈர்த்து வேலை வாய்ப்புகளை அதிகரிக்க அரசு பல நடவடிக்கைகளை எடுக்கிறது.
அதேபோல், பல லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கி வரும் விசைத்தறி தொழிலைப் பாதுகாக்க, நடவடிக்கை எடுக்காமல் விட்டது, வருத்தத்தை அளிக்கிறது.தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டு நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. இனி, தள்ளுபடி போன்ற எதற்கும் வாய்ப்பில்லை.இனி அடுத்து வரும் அரசாவது, விசைத்தறியாளர்களின் பிரச்னைகளைக் தீர்க்க, முன்னுரிமை அளிக்க வேண்டும் என்பதே எங்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement



Thanks for the source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *