Share on Social Media


புதுச்சேரி : திருப்பாவையில் நவீன விஞ்ஞான கருத்துக்களை, அன்றே மெய்ஞானத்துடன் உணர்ந்து ஆண்டாள் பதிவிட்டுள்ளார் என, நான்காம் நாள் சொற்பொழிவில் ஓய்வு பெற்ற நீதிபதி ராமபத்ரன் உபன்யாசம் செய்தார்.

புதுச்சேரி காந்தி வீதி, வரதராஜ பெருமாள் கோவிலில் கடந்த 16ம் தேதி திருப்பாவை சிறப்பு சொற்பொழிவு துவங்கியது.நேற்றைய நான்காம் நாள் சொற்பொழிவில் ஓய்வு பெற்ற நீதிபதி ராமபத்ரன் உபன்யாசம் செய்ததாவது:திருப்பாவையின் நான்காம் பாசுரத்தினை நாடு செழிக்க நல்மழை பொழிய வைக்கும் பாசுரம் எனலாம்.

திருப்பாவை பாசுரங்களில் மாதவன், கேசவன், தாமோதரன், நாராயணன், கோவிந்தன் என்ற பெயர்களில் பாடப்பட்டு இருந்தாலும், கிருஷ்ணாவதார நிகழ்வுகள் பல இடங்களில் சொல்லப்பட்டு இருந்தாலும், இந்த நான்காம் பாசுரத்தில் மட்டும் தான் இறைவனை கண்ணா என்று ஆண்டாள் அழைத்து பாடியுள்ளார்.இப்பாசுரத்தில் தமிழுக்கே உரித்தான ‘ழ’ என்ற எழுத்து 11 முறை வருவது இந்த பாசுரத்தின் மற்றொரு சிறப்பு. இலக்கிய நோக்கில் பாசுரத்தை அணுகினாலும், தமிழ் இலக்கணத்தின் உவமை அணி தாக்கமும் இந்த பாசுரத்தில் ஓங்கி நிற்கின்றது. ஆண்டாள் இந்த நான்காம் பாசுரத்தில் ஸ்ரீமன் நாராயணனை, ஊழி முதல்வர் என்று உருவகப்படுத்தியுள்ளார்.

நவீன விஞ்ஞானத்தில் கருந்துளை என்றும், அதுவே இப்பிரபஞ்சம் முழுவதற்கும் ஆதாரமாக உள்ள பால்வெளி அண்டத்தின் அச்சு என்றும் சொல்லு வதை முன்பே மெய்ஞானத்தில் அன்றைக்கே ஆண்டாள் சொல்லிவிட்டார்.அதேபோன்று ‘ஆழி போல் மின்னி வலம்புரிபோல் நின்றதிர்ந்து’ என்று ஆண்டாள் சொல்லுகிறார். ஒலியின் வேகத்தைவிட அதிகம் என்பதால் மின்னலை தொடர்ந்து தான் இடி முழக்க ஒலியை கேட்க முடியும் என்னும் நவீன விஞ்ஞான கருத்தை இந்த சொற்களால் ஆண்டாள் அன்றே சொல்லிவிட்டாள்.

ஆயிரம் சிப்பிகள் சூழ ஒரு இடம்புரிசங்கு இருக்கும். ஆயிரம் இடம்புரி சங்குகள் சூழ ஒரு வலம்புரி சங்கு இருக்கும். ஆயிரம் வலம்புரி சங்குகள் சூழ தேவதத்தம் என்ற சங்கு இருக்கும். ஆயிரம் தேவதத்தம் சங்குகள் சூழ இருப்பது பாஞ்சன்யம் எனும் சங்கு.இப்படிப்பட்ட அபூர்வ பாஞ்சன்யம் தான் பகவான் கையில் இருக்கும் சங்கு. இது திருப்பாவையில் 5 இடங்களில் பாடப்பெற்றுள்ளது.இவ்வாறு அவர் உபன்யாசம் செய்தார்.

Advertisement



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *