Share on Social Media

ஆண்டர்சனின் ஆரம்ப காலங்கள் காயங்களாலும் புறக்கணிப்புகளாலும் நிறைந்தவை. ஒரு வேகப்பந்து வீச்சாளருக்கு காயம் என்பது சாதாரணம் இல்லை. நீங்கள் ஆட்டத்தை விட்டு வெளியேறிய பின்னர் அடுத்த நொடி உங்களின் இடத்தை மற்றொரு வீரர் பிடித்து விடுவார். இங்கிலாந்து மாதிரி வேகப்பந்து வீச்சுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் நாடுகளில் எல்லாம் எளிதாக ஒரு வீரரை இன்னொரு வீரரால் அணியிலிருந்து மாற்ற முடியும். இப்படிப்பட்ட சூழலில் 18 ஆண்டுகள் இங்கிலாந்து அணியின் பிரதான பந்து வீச்சாளராக இருக்கிறார் ஆண்டர்சன். தற்போது ஆண்டர்சனால் காயம் ஏற்படாது எப்படி காத்துக் கொள்வது, ஏற்பட்ட காயத்தில் இருந்து எப்படி சீக்கிரம் மீள்வது, மீண்ட பின்பு அதே பழைய ஃபார்மை எப்படி எட்டிப் பிடிப்பது போன்ற தலைப்புகளில் புத்தகமே எழுத முடியும். இந்த பதினெட்டு ஆண்டு காலம் அவருக்கு அத்தனை பெரிய அனுபவங்களைக் கொடுத்துள்ளது.

ஜேம்ஸ் ஆண்டர்சன்

ஜேம்ஸ் ஆண்டர்சன்

தோள்பட்டைக்கு காயம் கொடுக்கும் பந்து வீச்சு முறையை மாற்றி அமைத்தது, அதிக தூரம் குதித்து பந்து வீசுவதால் காயம் ஏற்படும் என்று அதை மாற்றி அமைத்தது, ஜாகீர் கானின் பந்தை மறைத்து வைத்து வீசும் வித்தையைக் கற்று பந்து வீசியது, பணம் கொழிக்கும் டி20 லீக் கிரிக்கெட்டை புறக்கணித்தது என்று ஆண்டர்சன் டெஸ்ட் கிரிக்கெட்டுக்காக செய்த தியாகங்கள் மிக அதிகம். தன்னால் எது முடியும்? எதைத் தேர்வு செய்தால் அதிக காலம் ஜொலிக்க முடியும் என்பதை நன்கு ஆராய்ந்து தேர்வு செய்து டெஸ்ட் போட்டிகளில் மட்டும் ஆடியதின் வெகுமதிதான் சமீபத்தில் இவர் படைத்த 1000 முதல் தர விக்கெட்டுகள் என்ற சாதனை.

டி20 லீக் போட்டிகளின் ஆதிக்கத்தில் வீரர்கள் சிக்கிக் கொள்வதால் இனி மற்றொரு வீரர் 1000 விக்கெட்டுகள் என்ற சாதனையைப் படைப்பது மிகவும் கடினம்தான். ஆயிரம் விக்கெட்டுகளை வீழ்த்திய கடைசி வீரர் என்ற சாதனையும் ஆண்டர்சனுக்கு கிடைத்தாலும் கிடைக்கலாம். வர இருக்கும் இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பந்து வீச்சாளர்கள் வரிசையில் கும்ப்ளேவை பின்னுக்கு தள்ளி மூன்றாவது இடத்திற்கு வந்து விடுவார் ஆண்டர்சன். அவரின் உத்வேகத்தையும், இன்னமும் சாதிக்க வேண்டும் என்ற வெறியையும் பார்த்தால் ஷேன் வார்னேயின் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இரண்டாவது என்ற சாதனைக்குக் கூட சற்று ஆபத்து தான்.

30 வயதுக்குப் பிறகு ஆண்டர்சனின் எழுச்சி மிகவும் பெரியது. எங்கெல்லாம் தன்னிடம் குறை இருக்கிறதோ அதை எல்லாம் களைந்து எழுந்து வந்து கொண்டே இருக்கிறார். வெறும் ஸ்விங் என்று நின்று விடாமல் ஸ்லோயர் பந்துகள், கட்டர் பந்துகள், வாபில் சீம் பந்து வீச்சு என்று இன்னமும் கிரிக்கெட்டில் என்னென்ன வித்தைகள் இருக்கிறதோ அதை எல்லாம் கற்று தன்னை மெருகேற்றி கொண்டே இருக்கிறார். 30 வயதிற்கு பிறகு மட்டும் சுமார் 349 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் ஜிம்மி. வெளிநாடுகளில் விக்கெட் எடுக்க மாட்டார் என்ற விமர்சனத்துக்கும் சமீபமாக ஆண்டர்சன் தனது ஆட்டத்தின் மூலம் பதில் கொடுத்து வருவது கண் கூடு.

ஜேம்ஸ் ஆண்டர்சன்

ஜேம்ஸ் ஆண்டர்சன்

2019-ம் ஆண்டு தென்னாப்ரிக்க அணியின் பிரதான பந்து வீச்சாளர் பிலாண்டர் ஓய்வை அறிவித்தார். அவர் “ஒரு வேகப்பந்து வீச்சாளரின் வாழ்க்கையில் மிகவும் கடினமான பகுதியாகிய 35 வயதை நான் எட்ட இருப்பதால் ஓய்வு பெறுகிறேன்” என்று சொல்லியிருந்தார். ஆனால் 38 வயதான ஆண்டர்சனோ, “நான் ஓய்வு பெறுவதற்கான எந்த ஒரு காரணமும் இப்போது என்னிடம் இல்லை” என்கிறார். இங்கு தான் ஒரு வேகப்பந்து வீச்சாளர் காலத்திற்கு ஏற்ப எப்படி தனது உடலையும், ஆட்ட நுணுக்கத்தையும் மேம்படுத்த வேண்டும் என்று ஆண்டர்சன் பாடம் எடுக்கிறார் இக்கால இளைஞர்களுக்கு.

இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சினை அதிக முறை அவுட் ஆக்கியது ஆண்டர்சன்தான். சச்சினின் பேட்டிங் வாரிசாக கருதப்படும் விராட் கோலியை 2014 தொடரில் மிகவும் அலட்சியமாக கையாண்டு வெற்றி கண்டார் ஆண்டர்சன். விராட் காலத்திற்குப் பிறகு இந்திய கிரிக்கெட்டை ஆளப் போவது இவர் தான் என்று பலரும் கருதிய ஷுப்மன் கில்லையும் கடந்த டெஸ்ட் தொடரில் எளிதாக அவுட் செய்தார் ஆண்டர்சன். மூன்று தலைமுறை வீரர்களையும் வெற்றி கண்டு இன்னமும் தனது கொடியை கிரிக்கெட் உலகில் பறக்க விட்டுக் கொண்டே இருக்கிறார். யாருக்கு தெரியும்? நாளை கில் ஓய்வு பெற்று அவருக்கு பதில் மற்றொரு வீரர் ஆட வந்தால் கூட அவருக்கும் அவுட் ஸ்விங்கர் வீச ஓடி வருவார் ஆண்டர்சன். கிரிக்கெட்டின் ஓய்வறியா வீரனுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்!

Thanks for the source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *