Share on Social Media


சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் அ.தி.மு.க அவைத்தலைவர் மதுசூதனனின் உடல்நிலை குறித்து விசாரிக்க, எடப்பாடி பழனிசாமியும், சசிகலாவும் அடுத்தடுத்த வந்தது தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பைக் கிளப்பியது. அதேவேளை, ”மருத்துவமனையில் நிகழ்ந்தது ஏதேச்சையான சம்பவமாக இருக்கலாம், ஆனால், அ.தி.மு.கவை மையமிட்டு எடப்பாடி பழனிசாமிக்கும் சசிகலாவுக்கும் இடையில் நிகழ்ந்துவரும் மோதல் இறுதிகட்டத்தை அடைந்துவிட்டது. இன்னும் சில நாள்களில் அது பூதாகரமாக வெடிக்கும்” என்கிற பரபரப்பைக் பற்ற வைக்கிறார்கள் அ.தி.மு.கவின் முன்னணி நிர்வாகிகள் சிலர்.

சசிகலா

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக அரசியலிலிருந்து ஒதுங்கிக்கொள்ளப்போவதாக அறிவித்த சசிகலா, தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு, அ.தி.மு.க நிர்வாகிகளுடன் அலைபேசியில் உரையாடுவது போன்ற ஆடியோக்களை வெளியிட்டு வந்தார். ஆரம்பத்தில் பகுதி அளவிலான நிர்வாகிகளிடம் பேசிய ஆடியோக்கள் வெளிவந்தநிலையில், கடைசியாக முன்னாள் எம்.பி-க்கள், எம்.எல்.ஏ-க்கள், மேயர்களோடு உரையாற்றும் ஆடியோக்கள் வெளியாகின. அப்படி வெளியான ஆடியோக்களில் பெரும்பாலும், “நான் விட மாட்டேன், கட்டாயம் வந்துடுவேன். கட்சியை மீட்பேன். கொரோனா காலம் முடியட்டும். தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் வருவேன்” போன்ற கருத்துகளே பிரதானமாக இடம்பெற்றிருந்தன.

சசிகலாவின் இந்த நடவடிக்கைகளுக்கு எதிர்வினையாக, முதலில் அ.தி.மு.க தலைமைக் கழகக் கூட்டத்திலும், பின்னர் ஒவ்வொரு மாவட்டத்திலும் அவரைக் கண்டித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தவிர, சசிகலாவுடன் தொடர்பிலிருந்த 20 பேர் அதிரடியாகக் கட்சியிலிருந்து நீக்கமும் செய்யப்பட்டனர். தொடர்ந்து, சசிகலாவுக்கு ஆதரவாக ஒரு சில இடங்களில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்தநிலையில், முன்னாள் எம்.பியும் அ.தி.மு.கவின் மூத்த தலைவருமான அன்வர்ராஜா, தொலைக்காட்சி விவாதமொன்றில், நெறியாளரின் கேள்விக்கு, ”எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்கியது சின்னம்மா”தான் எனப் பேசியது அ.தி.மு.க வட்டாரத்தில் பரபரப்பைக் கிளப்பியது. அதனைத் தொடர்ந்து, அ.தி.மு.கவினர் யாரும் தொலைக்காட்சி விவாதங்களில் கலந்துகொள்ளக்கூடாது என்கிற அதிரடியான அறிக்கை, இ.பி.எஸ் – ஓ.பி.எஸ் இருவரின் கையெழுத்தோடு வெளியானது. ஆனால், சிறையில் இருந்து வெளியேவந்து ஐந்து மாதங்களுக்குப் பிறகு, தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு நேர்காணல் தந்தார் சசிகலா. இன்னும் ஒருசில நாள்களில் அவர் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செல்லவிருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது. நேற்று அப்பல்லோ மருத்துவமனையிலும், எடப்பாடி பழனிசாமி வரும் நேரத்தைத் தெரிந்துகொண்டு சசிகலா அங்கு வந்தார். அதுமட்டுமல்ல, வேண்டுமென்றேதான் அ.தி.மு.க கொடியைக் கட்டிக்கொண்டு வருகிறார் என்றும் சென்னை மாவட்ட அ.தி.மு.க நிர்வாகிகள் முணுமுணுத்தனர்.

WhatsApp Image 2021 07 20 at 1 59 21 PM Tamil News Spot
மருத்துவமனைக்கு வந்த எடப்பாடி

இந்தநிலையில், “சிறையில் இருந்து வெளிவந்த ஆரம்பகால சசிகலாவின் நடவடிக்கைகளுக்கும் தற்போதைய நடவடிக்கைகளுக்கும் மிகுந்த வேறுபாடு இருக்கிறது. அவருக்கு மேலிடத்தில் இருந்து கிரீன் சிக்னல் கிடைத்துவிட்டது. இனி அவர் அடித்துதான் ஆடுவார்” என்கிறார் அ.தி.மு.க முன்னணி நிர்வாகி ஒருவர்.

இதுகுறித்து, விரிவாகப் பேசும் அவர்,

“அ.தி.மு.க நிர்வாகிகள் யாரும் தொலைக்காட்சி விவாதங்களில் கலந்துகொள்ளக்கூடாது என அறிக்கை வெளியிட்டது அன்வர் ராஜாவுக்காக மட்டுமல்ல. சசிகலா சுற்றுப்பயணம் செல்லும் நேரத்தில் கண்டிப்பாக அது தொடர்பாக தொலைக்காட்சிகளில் விவாதங்கள் நடக்கும். அப்போது, அவருக்கு வலு சேர்க்கின்ற வகையில் எந்தவித விவாதங்களும் அமைந்துவிடக்கூடாது என்பதற்காகவும் வந்த அறிக்கைதான் அது. சசிகலாவை ஆரம்பத்தில் துணிச்சலாக எதிர்க்கொண்டிருந்த எடப்பாடி இப்போது கொஞ்சம் பின்வாங்க ஆரம்பித்துவிட்டார். காரணம், சசிகலா அம்மையாருக்கு பா.ஜ.க மேலிடத்தில் இருந்து க்ரீன் சிக்னல் கிடைத்துவிட்டது. தனியார் தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டி அதன் வெளிப்பாடுதான்.

அம்மாவை (ஜெயலலிதா) யாருமே அவ்வளவு எளிதில் பார்க்கமுடியாது. ஆனால், நடக்க வேண்டிய வேலைகள் எல்லாம் அட்டோமேட்டிக்காக நடக்கும். ஆனால், எடப்பாடியாகட்டும் ஓ.பி.எஸ் ஆகட்டும் அவர்களை யார் வேண்டுமானாலும் எளிதாகச் சந்திக்க முடியும். ஆனால், கட்சியில் எந்த வேலையும் ஒழுங்காக நடப்பதில்லை. இவரைப் போய் பார்த்தால் அவருக்குப் பிடிக்காது, அவரைப் போய் பார்த்தால் இவருக்குப் பிடிக்காது என இரட்டைத் தலைமையால் கட்சி சின்னாபின்னமாகியிருக்கிறது. அதனால், நிர்வாகிகள் பலர் என்ன செய்வதெனத் தெரியாமல் குழம்பிப் போயிடுக்கின்றனர். தேர்தல் செலவுக்குக் கட்சியில் இருந்து பணம் கொடுத்தாலும், அதைவிட அதிகமாக சொந்தக் காசைப் போட்டுத்தான் பல பேர் செலவழித்திருக்கிறார்கள். இந்தநிலையில், அதிகாரமிக்க ஒற்றைத் தலைமையாக இருந்தால், இதுபோன்ற விஷயங்கள் எந்தப் பிரச்னையும் இருக்காது. கடந்த காலங்களில் இருந்ததும் இல்லை. அதுமட்டுமல்ல, வழக்கு, சிறை போன்ற பஞ்சாயத்துக்கள் வந்தாலும், தனியாகவே எதிர்கொள்ளும் நிலைதான் தற்போது இருக்கிறது. அதே, அம்மா இருந்தால் அப்படி விட்டுவிட மாட்டார். அதேபோலதான் சசிகலா அம்மையாரும். மிகவும் துணிச்சலாக உடன் இருந்து சப்போர்ட் செய்வார் என நிர்வாகிகள் நினைக்கத் தொடங்கிவிட்டனர்.

jeyalalitha sasikala Tamil News Spot
ஜெயலலிதா – சசிகலா

எங்கள் கட்சி நிர்வாகிகளைப் பொறுத்தவரை எல்லாவற்றையும் கட்சித் தலைமையிடம் ஒப்படைத்துவிட்டு, தலைமை சொல்கின்ற வேலையை மட்டுமே செய்தே பழக்கப்பட்டவர்கள். அவர்களுக்கு தற்போதைய கட்சி நடைமுறை அலுப்பையே தருகிறது. அதனால் சசிகலாவின் பக்கம் சென்றுவிடலாமே என்ற யோசனைக்கு பலர் ஏற்கெனவே வந்துவிட்டனர். பூனைக்கு யார் மணி கட்டுவது என்பதுபோல, யார் முதலில் செல்வது என்பதில்தான் எல்லோரும் அமைதியாக இருக்கிறார்கள். மற்றவர்களை விடுங்கள், கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ்ஸே அந்தத் எண்ணத்தில்தான் இருக்கிறார். ஆரம்பத்திலேயே நாம் எதையாவது செய்யப்போய் ஏன் பெயரைக் கெடுத்துக்கொள்ள வேண்டும், எல்லோரும் அவரை நோக்கி போனபின்னால் கடைசியாகப் போய்க்கொள்ளலாமபென்ற திட்டத்தில்தான் இருக்கிறார். இது சசிகலா அம்மையாருக்கும் நன்றாகவே தெரியும்.

Also Read: ` எம்.ஜி.ஆரின் உளவாளியா? ஜெயலலிதாவின் தோழியா?’ – சர்ச்சைக்குப் பாதை அமைத்த சசிகலா!

வெளியில் யாரும் என்ன வேண்டுமானால் பேசலாம், ஆனால், எங்கள் கட்சியில் தற்போது இருக்கும் முக்கிய நிர்வாகிகள் பலருக்கு வாழ்வு கொடுத்தது சசிகலா அம்மையார்தான். கொங்கு பகுதியைச் சேர்ந்த மூத்த தலைவர், பல துறைகளுக்கு அமைச்சராக இருந்தவர், ஒரு கட்டத்தில் கடன் பிரச்னையால் மிகவும் சிரமப்பட்டார். அந்த நேரத்தில் அவருக்கு சப்போர்ட் செய்து தூக்கிவிட்டது சசிகலா அம்மாதான். அதனால்தான் அவர் இதுவரை சசிகலா அம்மாவை எதிர்த்து ஒரு வார்த்தைகூட பேசியதில்லை. அவ்வளவு ஏன், எடப்பாடி பழனிசாமியின் வலது – இடது கரங்களாக இருக்கின்ற வேலுமணி, தங்கமணி ஆகிய இருவரும் கூட தீவிரமான சசிகலா அனுதாபிகள்தான். அதனால்தான் அவர்களும்கூட இதுவரை அந்தம்மாவை எதிர்த்து எதுவும் பேசவில்லை. இப்படி கட்சியில் பலரை அடுக்கிக்கொண்டே போகலாம். எங்களுக்குத் தெரிந்தவரை எடப்பாடி பழனிசாமி, ஜெயக்குமார், கே.பி.முனுசாமி போன்ற ஒருசிலர்தான் அந்தம்மாவுக்கு எதிராக இருக்கின்றனர். சி.வி.சண்முகம் கூட எடப்பாடி பேசச் சொல்லித்தான் பேசுகிறார். அவரும்கூட ஈஸியாகச் சரணடைந்துவிடுவார்.

Tamil News Spot
வேலுமணி தங்கமணி

அதுமட்டுமல்ல, சசிகலாவின் சகோதரர் திவாகரன், ஏற்கெனவே எடப்பாடி பழனிசாமியுடன் நெருக்கமாகத்தான் இருக்கிறார். அவரும் எப்படியும் கட்சிக்குள் சென்றுவிடலாம் என சசிகலா அம்மையாருக்கு நம்பிக்கை கொடுத்திருக்கிறார். தற்போதைக்கு சசிகலாவின் கை ஓங்கியிருந்தாலும், எடப்பாடி பழனிசாமியும் லேசில் விடக்கூடிய ஆள் இல்லை. அதனால், சசிகலா, எடப்பாடி பழனிசாமி இருவரில் கட்சி யாருக்கு என்கிற யுத்தத்தின் இறுதிப் பகுதிக்கு வந்துவிட்டோம் என்றே நினைக்கிறேன். முடிவுகள் இன்னும் ஒருசில மாதங்களில் தெரிந்துவிடும்” என்கிறார் உறுதியாக.Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *