Share on Social Media


சென்னை:  சென்னை மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட ஆட்சேபனை இல்லாத நிலங்களில் வசிக்கும் குடியிருப்புவாசிகளுக்கு வீட்டுமனை பட்டா வழங்க கோரி சென்னை தெற்கு மாவட்ட திமுக சார்பில் எம்ஜிஆர் நகர் மார்க்கெட் அருகில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் மா.சுப்பிரமணியன் எம்எல்ஏ தலைமை வகித்தார். தலைமை செயற்குழு உறுப்பினர் கே.கே.நகர் தனசேகரன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஏ.எம்.வி.பிரபாகர் ராஜா, பகுதிசெயலாளர்கள் மு.ராசா, கண்ணன், துரைராஜ், வட்டசெயலாளர் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட செயலாளர் மா.சுப்பிரமணியன் பேசுகையில், ‘‘நாங்கள் ஆட்சியில் இருந்த போது எம்ஜிஆர் நகர் மக்களுக்கு அப்போதைய வருவாய் துறை அமைச்சர் ஐ.பெரியசாமியால் பட்டா வழங்கிய போது, ஸ்பெஷல் வடை, காபியுடன் பட்டா வழங்கினோம். ஆனால் தற்போதைய வருவாய்த்துறை அமைச்சர் வாயிலேயே வடை சுட்டுக்கொண்டு இருக்கிறார். திமுக, சென்னை மாநகராட்சிக்கு என்ன செய்தது என்று முதல்வர் கேள்வி எழுப்பியுள்ளார். முதல்வர் தயார் என்றால் தலைமை செயலகத்திற்கு வருகிறேன், இல்லை பசுமை வழிச்சாலை இல்லத்திற்கு வருகிறேன். அதுவும் வேண்டாம் என்றால் எடப்பாடியில் உள்ள பழனிச்சாமியின் இலத்திற்கே வருகிறேன். மிண்ட், காக்கரின் பாலம் அதிமுக கட்டியது என்கிறார். ஆனால் அதற்கான பணிகளை தொடங்கி 70% பணிகளை முடித்தது திமுக ஆட்சி.

முதல்வருக்கு ஒன்று கூறுகிறேன், கரு யாரால் உருவானதோ அவர்கள் தான் பெயர் வைக்க வேண்டும்” என்றார். அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேசுகையில், ‘‘இன்னும் சில காலம்தான் எடப்பாடியின் ஆட்சிக் காலம். ரேசன் கடை மூலம் ரூ.2500 கொடுப்பதில் அதிமுகவின் இரட்டை இலை சின்னம் இடம்பெறுவது தொடர்ந்தால் அந்த கட்சியே தடை செய்யப்படும் நிலை வரும். எடப்பாடிக்கு திராணி இருந்தால் தன் பினாமியின் பெயரில் வாங்கியிருக்கும் 19 வீடுகளை பற்றி விவாதிக்க தெரியாதா” என்றார். ஆர்ப்பாட்டத்தில் எம்எல்ஏக்கள் அரவிந்த் ரமேஷ், வாகை சந்திரசேகர், வர்த்தகர் அணி செயலாளர் கவிஞர் காசிமுத்து மாணிக்கம், வாசுகி பாண்டியன், தங்கராஜ், சசிகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

* 5,000 பேர் மீது வழக்குப்பதிவு
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மா.சுப்பிர மணியன் உள்ளிட்ட 5,000 பேர் மீது சமூக இடைவெளியின்றி கூடியது, அளவுக்கு அதிகமாக திரண்டது உள்ளிட்ட பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *