Share on Social Media


தமிழக முதல்வர் ஸ்டாலின் மற்றும் அவரின் கூட்டணி கட்சிகள், குடியுரிமை திருத்தச் சட்டம், விவசாய சட்டங்களுக்கு எதிராக எத்தனை தீர்மானங்களையும் சட்டசபையில் நிறைவேற்ற முடியும். அவ்விரு சட்டங்களும் தமிழகத்தில் செயல்படுத்தப்படுவது உறுதி. தமிழக மக்களை நீண்ட காலத்திற்கு முட்டாளாக்க முடியாது.
– தமிழக பா.ஜ., பொறுப்பாளர் சி.டி.ரவி

‘ஆச்சர்யமாக இருக்கிறது… தமிழக அரசு வேண்டாம் என கூறிய சட்டங்கள், தமிழகத்தில் எப்படி செயல்படுத்தப்படும்… ஆட்சியை கவிழ்த்து, பா.ஜ., ஆட்சிக்கு வந்து விடுமா… அதையும் சொன்னால் நன்றாக இருக்குமே…’ என, கூறத் தோன்றும் வகையில், தமிழக பா.ஜ., பொறுப்பாளர் சி.டி.ரவி அறிக்கை.

இஸ்லாமிய மத ஒடுக்குமுறைகளால் அல்லல்பட்ட மக்கள் அடைக்கலம் தேடி வந்ததாலேயே, குடியுரிமை திருத்தச் சட்டத்தை இந்தியா கொண்டு வந்தது. அதை ரத்து செய்யும் தீர்மானத்தை நிறைவேற்றி, நம்பி வந்த மக்களுக்கு குடியுரிமை வழங்க முதல்வரின் அரசியல் தடையாக இருக்கலாமா?
– தமிழக பா.ஜ., செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி

‘அடைக்கலம் தேடி வந்தவர்களே அதை உணராத போது, பா.ஜ.,வின் பேச்சு எடுபடத் தான் செய்யாது…’ என, விரக்தியாக கூறத் தோன்றும் வகையில், தமிழக பா.ஜ., செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி அறிக்கை.

பெண்கள் இன்னமும் தனியாக செயல்பட ஏதுவாக அவர்களின் உடல் வாகு இல்லை என, உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார். இதனால், தாடி, டர்பன் இல்லாத தலிபான் போல அவர் விளங்குகிறார். இவர்களுக்கா உ.பி., பெண்கள் ஓட்டளித்தனர்?
– திருவனந்தபுரம் காங்., – எம்.பி., சசி தரூர்

‘பெண்களை பலாத்காரம் செய்வோரை கண்டிக்காதீர். அப்பாவி பெண்கள் மீது இரக்கம் கொண்டு இதுபோல கூறிய முதல்வரை வசைபாடுவதா…’ என, கண்டிக்கத் துாண்டும் வகையில், திருவனந்தபுரம் காங்., – எம்.பி., சசி தரூர் அறிக்கை.

என் வேண்டுகோளை ஏற்று, கிறிஸ்துவ தேவாலய ஊழியக்காரர்களுக்கு நல வாரியமும், மாவட்டங்களில் சிறுபான்மையினர் நல அலுவலர்களையும் தந்த சிறுபான்மை மக்களின் நாயகர் முதல்வருக்கு நன்றி.
– தமிழக சிறுபான்மையினர் ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ்

‘அப்படியே சிறுபான்மையினருக்கு தனி ரேஷன் பொருட்கள், மாதத் தொகை, தங்குவதற்கு வீடு கேளுங்கள். முதல்வர் கொடுத்தாலும் கொடுத்து விடுவார்…’ என, கூறத் தோன்றும் வகையில், தமிழக சிறுபான்மையினர் ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ் அறிக்கை.

தமிழக அரசு மீது, மதங்களுக்கு எதிரான, கடவுள் நம்பிக்கையற்ற அரசு என்ற தவறான எண்ணத்தை விதைக்க பா.ஜ., முயற்சி செய்கிறது. ஆனால் தன் செயல்களால் அந்த மாயையை முதல்வர் உடைக்கிறார்.
– தமிழக காங்., செய்தி தொடர்பாளர் அமெரிக்கை நாராயணன்

‘அப்படி என்ன ‘உடைத்தார்’ என்பதையும் சொன்னால், தமிழக மக்களுக்கு புரியும்…’ என, கேட்கத் தோன்றும் வகையில், தமிழக காங்., செய்தி தொடர்பாளர் அமெரிக்கை நாராயணன் அறிக்கை.

‘எங்கே என் வேலை?’ என கேட்டு, இளைஞர்கள் நடத்தி வரும் போராட்டங்களை தடுத்து நிறுத்தவே, திரிபுராவில் கொடூர வன்முறையை, பா.ஜ., முன்னெடுக்கிறது.
– மார்க்சிஸ்ட் பொலிட்பீரோ உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன்

‘திரிபுராவில் 35 ஆண்டுகளுக்கும் மேலாக கம்யூனிஸ்ட் அரசு ஆட்சியில் இருந்தது. அந்த ஆட்சியை வீட்டுக்கு போகச் சொல்லி விட்டனர் மக்கள். அதனால், அங்கு எழுந்துள்ள அரசியல் குழப்பம் தான் இது என்கின்றனரே…’ என, கூறத் துாண்டும் வகையில், மார்க்சிஸ்ட் பொலிட்பீரோ உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் அறிக்கை.Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *