Share on Social Media


கோவை, : ஆன்லைனில் விற்பனை செய்யப்படும் தரமற்ற, பல்ஸ்ஆக்சிமீட்டர் தாறுமாறாக செயல்படுவதால், பொதுமக்கள் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என, டாக்டர்கள் எச்சரிக்கின்றனர்.

கொரோனா பரவல் அதிகரித்துள்ள சூழலில், இதற்கான மருத்துவ உபகரணங்களின் விற்பனை, பல மடங்கு அதிகரித்துள்ளது. இவ்வாய்ப்பை பயன்படுத்தி, இத்துறையில் முன்பின் அறிமுகமில்லாத பலர், சமூகவலைதளங்கள் மூலம் விற்பனை மேற்கொண்டு வருகின்றனர். முககவசங்கள், கையுறை, முகத்துக்கான ஷீல்டு, கிருமிநாசினி ஆகியவற்றில் துவங்கி தற்போது, பல்ஸ்ஆக்சிமீட்டர், தெர்மா மீட்டர், வென்டிலேட்டர் கருவி, சர்க்கரை அளவு காட்டும் குளூக்கோமீட்டர், ஆக்சிஜன் சிலிண்டர், ஆக்சிஜன் கன்சன்ட்ரேட்டர் என பலதரப்பட்ட மருத்துவ உபகரணங்கள், சமூகவலைதளங்களில் எளிதாக கிடைக்கின்றன.

இதில், பெரும்பாலானவை தரமின்றி இருப்பதாக, மருத்துவர்கள் தரப்பில் எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது.தற்போதைய சூழலை பயன்படுத்தி, எம்.ஆர்.பி., விலையை காட்டிலும், மூன்று மடங்கு கூடுதல் விலைக்கு, விற்பதாக புகார் எழுந்துள்ளது.இது குறித்து,தமிழ்நாடு மருந்து வணிகர் சங்க மாநில துணைத்தலைவர் கருப்பையா கூறுகையில், ”மருந்துகள் விற்பனைக்கு கட்டுப்பாடுகள் உள்ளன. சர்ஜிக்கல் சார்ந்த மருத்துவ உபகரணங்களுக்கு, பெரிதாக கட்டுப்பாடு இல்லை. அங்கீகாரம் உள்ளவர்கள் மட்டுமே விற்பனை செய்ய வேண்டும்.

முககவசம், கையுறை போன்றவை விற்பனை செய்வதால் சிக்கல் இல்லை. பல்ஸ்ஆக்சிமீட்டர், தெர்மாமீட்டர், ஆக்சிஜன் கன்சன்ட்ரேட்டர், வென்டிலேட்டர் போன்றவை எலக்ட்ரானிக் பொருட்கள்.ஆன்லைனில் இவற்றை தரமற்றதாக, பலர் விற்பனை செய்கின்றனர். பொதுமக்கள் இதில் கவனமுடன் இருக்க வேண்டும். கடையில் வாங்கினாலும், விற்பனைக்கு கட்டாயம் ரசீது பெற வேண்டும். தினமும் ஆயிரக்கணக்கானோர் ஏமாந்து நிற்கின்றனர்,” என்றார்.அரசு மருத்துவமனை மருத்துவர் ஒருவர் கூறுகையில், ‘நோயாளி ஒருவர் தரமற்ற பல்ஸ் ஆக்சிமீட்டரை வீட்டில் பயன்படுத்தியுள்ளார். ஆக்சிஜன் அளவு, 95க்கு மேல் காட்டியுள்ளது.

நன்றாக இருப்பதாக நினைத்து வீட்டிலேயே இருந்துள்ளார்.திடீரென்று மூச்சுவிட முடியாமல் சிரமப்பட்டபோதும், ஆக்சிஜன் அளவு 95க்கு மேல் காட்டியுள்ளது. இதனால், மிகவும் முடியாமல் சுயநினைவை இழக்கும் சமயத்தில், மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர்.பரிசோதித்ததில், 70க்கும் கீழ் ஆக்சிஜன் அளவு இருந்தது. பின்பு, அந்த பல்ஸ் ஆக்சிமீட்டரை பரிசோதித்த போது, சரியாக வேலை செய்யாததை பார்த்து அதிர்ச்சியடைந்தேன். இதுபோன்று எத்தனை பேர் பாதிக்கப்படுகின்றனர் என தெரியவில்லை.மருத்துவ உபகரணங்களை வாங்கும் போது, தரமான நிறுவனங்களின் பொருட்களை மட்டுமே வாங்க வேண்டும். ஆன்லைனில் மலிவாக கிடைக்கிறதே என வாங்கினால், உயிருக்கே ஆபத்தாகி விடலாம்’ என்றார்.

Advertisement



Thanks for the source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *