Share on Social Media


அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக 56 பேருக்கு அரசாணையாம். கண்டதேவியில் தேர் வடம் பிடித்திழுக்க, கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவில் மண்டகப்படி கொண்டாட, சேலம் திரவுபதி அம்மனை வழிபட, தி.மு.க., எப்போது அரசாணை வெளியிடும்?
– புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி

‘அவர்களின் ஒரே, ‘டார்கெட்’ பிராமண அர்ச்சகர், பூஜாரிகள் தான். மாநிலத்தின் பிற ஜாதியினரின் அத்துமீறல்களை கண்டுகொள்ள மாட்டார்கள்…’ என, கூறத் துாண்டும் வகையில், புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி அறிக்கை.

நாம் தமிழர் ஆட்சியின் வரைவு திட்டம் போல உள்ளது, தமிழக விவசாய பட்ஜெட். அதில் கூறப்பட்டுள்ள திட்டங்களை வெறுமனே அரசியலுக்காக பயன்படுத்த கூடாது. உள்ளப்பூர்வமாகச் செயல்படுத்த வேண்டும்!
– நாம் தமிழர் என்ற கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்

‘வழக்கமாக, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் தான் இப்படி சொல்வார். இந்த முறை நீங்கள் முந்திக் கொண்டீர்களே…’ என, கூறத் துாண்டும் வகையில், நாம் தமிழர் என்ற கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை.

வரலாற்றில் இருந்து தவறானவற்றையும் நாம் கற்றுக் கொள்ள முடியும். உதாரணமாக, ஹிந்துக்களுக்கும், முஸ்லிம்களுக்கும் இடையே, நிரந்தர மோதல் மனப்பான்மையை வளர்க்கும் வகையில், ‘பிரிவினை பேரச்ச நினைவு நாள்’ என, பிரதமர் மோடி கூறியதை வைத்து இதை செய்யலாம்.
– திருவனந்தபுரம் காங்., – எம்.பி., சசிதரூர்

‘பிரிவினை கால கொடூரங்களை இப்போது நினைவுபடுத்த தேவையில்லை. அமைதியை விரும்பும் பிரதமர் இதை மறந்திருக்கலாம்…’ என, சொல்லத் தோன்றும் வகையில், திருவனந்தபுரம் காங்., – எம்.பி., சசிதரூர் அறிக்கை.

கொரோனா இன்னும் ஓயவில்லை. மகிசாசுரன் போல இருக்கிறது. மகிசாசுரனை கொன்றால், இன்னோர் இடத்திலே தோன்றுவான். அதுபோல, கொரோனா தோன்றிக் கொண்டிருக்கிறது.
– தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன்

‘ஹிந்துக்களுக்கே தெரியாத புராண விஷயங்கள் எல்லாம் உங்களுக்கு அத்துபடி. ஆனால், ஹிந்து மத வழக்கங்களுக்கு எதிர்ப்பு. இப்படித் தான் உங்கள் அரசியல் உள்ளது…’ என, கூறத் துாண்டும் வகையில், தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பேச்சு.

விவசாயத்திற்கென தனி பட்ஜெட் தாக்கல் வரவேற்கக் கூடியது தான். ஆனால், அதே நேரத்தில், தேர்தல் அறிக்கையில் அளிக்கப்பட்ட விவசாய வாக்குறுதிகளை நிறைவேற்றுவது தொடர்பாக எந்த அறிவிப்பும் இல்லையே!
– தமிழ்நாடு விவசாயிகள் சங்க கூட்டியக்க மாநில துணைத் தலைவர் சுகுமாறன்

‘நிறைவேறும்; காத்திருங்கள்; நிறைவேற்ற மாட்டோம் என்று எப்போதாவது சொன்னோமா… என, தி.மு.க.,வினர் கேட்கின்றனரே…’ என, சொல்லத் தோன்றும் வகையில், தமிழ்நாடு விவசாயிகள் சங்க கூட்டியக்க மாநில துணைத் தலைவர் சுகுமாறன் அறிக்கை.

அண்டை நாடான ஆப்கனில், தலைநகரை நெருங்கி விட்டோம் என, தலிபான் பயங்கரவாதிகள் கொக்கரிக்கின்றனர். அந்த பயங்கரவாதிகளின் முயற்சியை தடுக்கும் நடவடிக்கைகளை, இந்திய ராணுவம் எடுக்க தயாராகலாம்.
– ஆர்.எஸ்.எஸ்., தேசிய செயற்குழு உறுப்பினர் ராம் மாதவ்

‘ஆப்கனுக்கு சென்று தலிபான்களுடன் சண்டையிடலாம் என்கிறீர்கள். தேவையில்லாத விவகாரம் இது…’ என, சொல்லத் தோன்றும் வகையில், ஆர்.எஸ்.எஸ்., தேசிய செயற்குழு உறுப்பினர் ராம் மாதவ் அறிக்கை.

AdvertisementSource link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *