Share on Social Media


வடலுார் : வடலுார் பேரூராட்சி பகுதியில் முறைகேடான குடிநீர் இணைப்புகள் மற்றும் மின் மோட்டார் மூலம் தண்ணீர் உறிஞ்சப்படுவதால் நகர் பகுதியில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனால், பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.

வடலுார் பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளன. சுமார் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொது மக்கள் வசித்து வருகின்றனர். வடலுார் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் நகரின் பல இடங்களில் குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.கோடை காலம் துவங்கிய நிலையில் பேரூராட்சிக்குட்பட்ட பல பகுதிகளில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. நடேசன் நகர், சவேரியார் நகர், ஆபத்தாரணபுரம், கல்லுக்குழி உட்பட நகரின் பல பகுதிகளில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு பொதுமக்கள் தினம் தினம் அவதிப்பட்டு வருகின்றனர்.பேரூராட்சி நிர்வாகம் பொதுமக்களுக்கு 3,000க்கும் மேற்பட்ட குடிநீர் இணைப்புகளை வழங்கி தண்ணீர் விநியோகம் செய்து வருகிறது.

ஆனால், பல பகுதிகளில் முறைகேடாக ஆயிரக்கணக்கான இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது. மேலும், மின் மோட்டார் மூலம் குடிநீர் உறிஞ்சப்படுவதால் நகரில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.இதுமட்டுமின்றி, சில பகுதிகளில் குடிநீர் தொட்டிக்குச் செல்லும் பம்ப்பிங் லைனில் கூட முறைகேடாக குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டு உள்ளது. இதனால் அப்பகுதியில் அடிக்கடி மின் மோட்டார் பழுது ஏற்பட்டு பேரூராட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்படுவதுடன், குடிநீர் விநியோகமும் முறையாக நடைபெறவில்லை.நகரின் பல பகுதிகளில் குடிநீர் குழாய் இணைப்பு கீழே இருப்பதால் குழி வெட்டி தண்ணீர் பிடிக்கும் அவல நிலையும் இருந்து வருகிறது. பல இடங்களில் குடிநீருடன் கழிவுநீர் கலந்து வருவதால் அப்பகுதி மக்கள் காய்ச்சலால் பாதிக்கப்படுகின்றனர்.

குடிநீர் இணைப்பு முறைகேடு, முறையாக விநியோகம் செய்யப்படாதது குறித்து அப்பகுதி மக்கள் பேரூராட்சி நிர்வாகம், மாவட்ட நிர்வாகத்திற்கு மனு கொடுத்தும், மறியல் உள்ளிட்ட ஆர்ப்பாட்டங்கள் நடத்தியும் எவ்வித நடவடிக்கையும் இல்லை என பொதுமக்கள் புலம்பு கின்றனர்.எனவே, வடலுார் பேரூராட்சி நிர்வாகம், முறைகேடாக வழங்கப்பட்டுள்ள குடிநீர் இணைப்புகளை முறைப்படுத்தியும், தண்ணீர் உறிஞ்சும் மின் மோட்டார்களை பறிமுதல் செய்து முறையாக குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். விருத்தாசலத்திலும் இதே நிலை…விருத்தாசலம் நகராட்சியில் உள்ள 33 வார்டுகளுக்கும் நகராட்சி நிர்வாகம் சார்பில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் மூலம் காலை, மாலை வேளைகளில் குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது.

ஆனால், அடுக்குமாடி குடியிருப்புகள், மாடி வீடுகளில் வசிப்போர் நகராட்சி குடிநீர் பைப் லைனில் மோட்டார் பொருத்தி, குடிநீரை உறிஞ்சும் அவலம் தொடர்கிறது. குறிப்பிட்ட சில மணி நேரம் மட்டுமே சப்ளை செய்யப்படும் தண்ணீர், அனைத்து பகுதிகளுக்கும் முறையாக குடிநீர் சேரவில்லை.இதனால், ஏராளமானோர் குடிநீர் கிடைக்காமல் காலி குடங்களுடன் அலையும் அவலம்ஏற்பட்டுள்ளது.விருத்தாசலம் நகராட்சி பகுதியில் குடிநீர் பைப்லைனில் பொருத்தியுள்ள மோட்டார்களை பறிமுதல் செய்து, தங்குதடையின்றி தண்ணீர் சப்ளை செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement



Thanks for the source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *