Share on Social Media

தமிழகத்திற்குப் பேரிடர் ஏற்படும் போதெல்லாம் வாசகர்கள் துணையோடு விகடன் களப்பணியாற்றிட முன்வந்து நிற்கும். பாதிக்கப்பட்டோருக்கு நிவாரண உதவிகள் செய்யும். கடந்த ஆண்டு கொரோனா லாக்டௌன் காரணமாக வாழ்வாதாரம் இழந்த பழங்குடியினர் மற்றும் நாடோடி இன மக்களின் தேவை அறிந்து அவர்களுக்கு மளிகைப் பொருள்களை விநியோகம் செய்தோம். கொரோனாவால் உயிரிழந்த ஏழைக்குடும்பத்தில் உள்ள குழந்தைகளின் கல்விக்கு உதவித் தொகையும் அளித்தோம். இந்தக் களப்பணிகள், ஒவ்வொரு முறையும் சவால்கள் நிறைந்ததாகவே இருக்கும். இப்போதும், அந்தச் சவாலுடன் ஒரு சேவையை முன்னெடுத்தோம்.

கொரோனா என்னும் கொடிய நோயின் இரண்டாம் அலையில் முதலுதவிக்காகவும், சிகிச்சைக்காகவும் அத்தியாவசியத் தேவையான `ஆக்ஸிஜன்’ என்னும் பிராண வாயுவிற்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து சமூக அக்கறையோடும், வாசகர்கள் துணையோடும் களப்பணியில் இறங்கியது விகடன். ஆக்ஸிஜன் உதவியை தேவையுள்ளவர்களிடம் கொண்டுசேர்த்தது.

பறிபோன 13 உயிர்கள்!

கொரோனாவின் இரண்டாவது அலையில் இந்தியா முழுவதும் மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் தட்டுப்பாடு காரணமாகத் தொடர்ந்து உயிர்ப்பலிகள் ஏற்பட்டுக் கொண்டு வருகின்றன. ஆக்ஸிஜன் பற்றாக்குறையை நிவர்த்தி செய்தாலே பல உயிர்கள் காப்பாற்றப்படும் என்ற நிலையில்தான், செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை காரணமாக சில மணிநேரத்திலேயே 13 நோயாளிகள் பலியான துயரச் செய்தி கடந்த மே 5-ம் தேதி தமிழகத்தை உலுக்கியெடுத்தது. கேட்போரின் காதுகளிலெல்லாம் இடியாய் விழுந்தது அந்தப் பெருந்துயர்.

செங்கல்பட்டு மருத்துவமனை

செங்கல்பட்டு மருத்துவமனை

அதை தொடர்ந்து, செங்கல்பட்டு மருத்துவமனையில் நிலவும் ஆக்ஸிஜன் அவலத்தை சரிசெய்ய விகடனால் இயன்ற உதவியைச் செய்ய முடிவெடுத்து, அங்கு கள ஆய்வு செய்தோம். மருத்துவமனையில் மொத்தம் 1,543 மருத்துவப் படுக்கைகள் இருக்கின்றன. இதில் கொரோனா சிகிச்சைக்காக 480 படுக்கைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதில் ஆக்ஸிஜன் வசதி கொண்ட படுக்கைகள் 325. சென்னைக்கு அடுத்து தமிழகத்திலேயே மிக அதிக அளவு கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாவட்டமான செங்கல்பட்டில் உள்ள அரசு மருத்துவமனைக்கு இது போதுமானதாக இல்லை. மேலும் ஆக்ஸிஜன் பற்றாக்குறை காரணமாக நோயாளிகள் நீண்ட நேரம் காத்திருக்கும் பரிதாப நிலை தொடர்ந்து இருந்துவந்தது தெரியவந்தது.

Thanks for the Source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *