622404 Tamil News Spot
Share on Social Media

லாபுஷேனின் சதத்தால் பிரிஸ்பேனில் நடந்துவரும் இந்திய அணிக்கு எதிரான 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி தனது முதல் நாள் ஆட்டநேர முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 274 ரன்கள் சேர்த்துள்ளது.

அபாரமாக பேட் செய்த லாபுஷேன் தனது 5-வது சதத்தைப் பதிவு செய்து 108 ரன்களில் ஆட்டமிழந்தார்.

இந்திய அணியில் டெஸ்ட் போட்டிக்கு அறிமுகமான தமிழக வீரர் நடராஜன், லாபுஷேன், மேத்யூவேட் ஆகிய இருவரின் விக்கெட்டுகளையும் வீழ்த்தி, பார்ட்னர்ஷிப்பையும் பிரித்தார். மேத்யூ வேட்(47), லாபுஷேன் (108) இருவரும் சேர்ந்து 113 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்துப் பிரிந்தனர். லாபுஷேன் மட்டும் களத்தில் இருந்திருந்தால், ஆஸி.ஸ்கோர் முதல் நாளிலேயே 350 ரன்களைத் தொட்டிருக்கும்.

1610707991756 Tamil News Spot

ஆஸி. கேப்டன் பெய்ன் 38 ரன்களிலும், கேமரூன் 28 ரன்களிலும் ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளனர்.

இந்திய அணியில் வீரர்கள் காயத்தால் அவதிப்படுவது இன்னும் தொடர்ந்து வருகிறது. வேகப்பந்துவீச்சாளர் ஷைனி 8-வது ஓவரை வீசியபோது, தொடைப்பகுதியில் சதைப்பிடிப்பு ஏற்பட்டு தொடக்கத்திலேயே வெளியேறினார். நாளை ஷைனி களமிறங்குவாரா என்பது ஸ்கேன் பரிசோதனைக்குப் பின்புதான் தெரியவரும். ஒருவேளை ஷைனி இல்லாத நிலையில் இந்திய அணிக்குப் பலவீனமாகவே அமையும்.

பிரிஸ்பேன் ஆடுகளம் வேகப்பந்துவீச்சுக்குச் சாதகமானது. இதில் ஆஸ்திரேலிய அணி 350 ரன்கள் அடித்துவிட்டாலே அது இந்திய அணிக்குச் சவாலானதுதான். அதன்பின் அந்த அணியின் வேகப்பந்துவீச்சார்களின் பந்துவீச்சை சமாளித்து இந்திய பேட்ஸ்மேன்கள் விளையாடுவதுதான் சவால் நிறைந்தது.

இன்றைய முதல் நாளிலேயே ஆஸ்திரேலிய அணியை ஆட்டமிழக்கச் செய்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும். லாபுஷேன் 37 ரன்கள் சேர்த்திருந்தபோது, நல்ல கேட்ச் வாய்ப்பை கேப்டன் ரஹானே தவறவிட்டது பெரும் தவறு.

1610708003756 Tamil News Spot

ஷைனி காயத்தால் வெளியேறியது போன்ற பின்னடைவு ஆஸி. அணியினர் ஸ்கோர் செய்யக் காரணமானது. நடராஜன், ஷர்துல் தாக்கூர், சுந்தர், சிராஜ் ஆகிய 4 பந்துவீச்சாளர்களுமே டெஸ்ட் போட்டியில் விளையாடாதவர்கள். இவர்களின் பந்துவீச்சு ஆஸி. பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி தரும் அளவுக்கு அமையவில்லை. அதனால் முற்பகுதியில் ரன் சேர்க்கத் திணறிய ஆஸி. பேட்ஸ்மேன்கள் 2-வது செஷனில் எளிதாக ரன்களைச் சேர்த்தார்கள்.

டெஸ்ட் போட்டியில் அனுபவமற்ற 4 பந்துவீச்சாளர்களையும் குறை கூறுவது எந்தவிதத்திலும் நியாயமல்ல. இவர்களின் வேகமே சராசரியாக 130 கி.மீ. இருக்கிறது. இது எந்தவிதத்திலும் ஆஸி. பேட்ஸ்மேன்களுக்கு சிரமமாக இருக்கப்போவதில்லை.

அதனால்தான், லாபுஷேன் முதல் செஷனில் 82 பந்துகளைச் சந்தித்து 19 ரன்கள் சேர்த்த நிலையில் 2வது செஷனில் இந்தியப் பந்துவீச்சின் ஆழத்தைப் புரிந்து 113 பந்துகளில் 82 ரன்களை விரைவாகச் சேர்த்தார். ஆகவே ஆஸி. பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி தரும் அளவில் இந்தியப் பந்துவீச்சு அமையவில்லை எனும் நிதர்சனத்தை ஏற்க வேண்டும்.

அதிலும் ஷர்துல் தாக்கூருக்கு லைன் லென்த்தில் முறையாகப் பந்துவீசவில்லை. தாக்கூர் வீசிய பல ஓவர்களில் பல பந்துகள் ஓவர் பிட்ச்சாக வந்து பேட்ஸ்மேன்கள் ரன்கள் சேர்க்க எளிதாக அமைந்தது. ஆதலால், நாளைய ஆட்டத்தில் முதல் செஷனில் இந்திய அணி விரைவாக விக்கெட்டுகளை வீழ்த்துவது கட்டாயம். அதற்காக முயல வேண்டும்.

1610708023756 Tamil News Spot

டாஸ் வென்ற ஆஸி. அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. வார்னர், மார்கஸ் ஹாரிஸ் ஆகியோர் களமிறங்கினர். சிராஜ் வீசிய முதல் ஓவரின் கடைசிப் பந்தில் ரோஹித் சர்மாவிடம் கேட்ச் கொடுத்து வார்னர் ஒரு ரன்னில் வெளியேறினார்.

மிகவும் அருமையான லென்த்தில் இன்கட்டராக வந்த பந்தைத் தொடலாமா வேண்டாமா என்ற யோசனையில் வார்னர் தொட்டுவிட்டார். கேட்ச் பிடிக்க முடியாத வகையில் மிகவும் தாழ்வாக வந்த பந்தை ரோஹித் சர்மா லாவகமாகப் பிடித்து, முதல் விக்கெட் விழக் காரணமாக அமைந்தார்.

அடுத்து லாபுஷேன் களமிறங்கி, ஹாரிஸுடன் சேர்ந்தார். ஷர்துல் தக்கூர் பந்துவீச அழைக்கப்பட்டார். தாக்கூர் வீசிய முதல் ஓவர், அதாவது 9-வது ஓவரின் முதல் பந்தில் ஹாரிஸ் ஸ்குயர் லெக் திசையில் பிளிக் செய்ய முயலவே பந்து வாஷிங்டன் சுந்தர் கைகளில் தஞ்சமடைந்தது.

ஹாரிஸ் 5 ரன்களில் தாக்கூர் பந்துவீச்சில் வெளியேறினார். இதுவரை டெஸ்ட் போட்டியில் 11 பந்துகளை மட்டுமே வீசியிருந்த தாக்கூர், தான் வீசிய முதல் பந்திலேயே விக்கெட்டை வீழ்த்தியுள்ளார்.

அடுத்துவந்த ஸ்மித், லாபுஷேனுடன் சேர்ந்தார். இருவரும் நிதானமாக ஆடி ஸ்கோரை உயர்த்தினர். வாஷிங்டன் சுந்தர் பந்துவீச்சுக்கு தொடக்கத்தில் இருந்தே ஸ்மித் திணறினார். உணவு இடைவேளையின்போது ஆஸி. அணி 2 விக்கெட் இழப்புக்கு 65 ரன்கள் சேர்த்திருந்தது.

1610708040756 Tamil News Spot

உணவு இடைவேளைக்குப் பின் வாஷிங்டன் சுந்தர் பந்துவீச அழைக்கப்பட்டார். நிதானமாக பேட் செய்துவந்த ஸ்மித் 36 ரன்களில் ரோஹித் சர்மாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இருவரும் சேர்ந்து 3-வது விக்கெட்டுக்கு 70 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர்.

அடுத்துவந்த மேத்யூ வேட், லாபுஷேனுடன் சேர்ந்தார். பொறுமையாக ஆடிய லாபுஷேன் 145 பந்துகளில் அரை சதத்தை நிறைவு செய்தார். அதன்பின் லாபுஷேன் ரன் ஸ்கோர் செய்யும் வேகம் அதிகரித்தது. அடுத்த 50 பந்துகளில் அதாவது 195 பந்துகளில் லாபுஷேன் சதம் அடித்தார்.

மேத்யூ வேட் அரை சதத்தை நெருங்கிய நேரத்தில் நடராஜன் பந்துவீச்சில் விக்கெட்டைப் பறிகொடுத்தார். மேத்யூ வேட் 45 ரன்களில் ஷர்துல் தாக்கூரிடம் கேட்ச் கொடுத்து விக்கெட்டை இழந்தார். டெஸ்ட் கிரிக்கெட்டில் நடராஜன் வீழ்த்தும் முதல் விக்கெட்டாக இது அமைந்தது. 4-வது விக்கெட்டுக்கு இருவரும் 113 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர்.

கேமரூன் க்ரீன், லாபுஷேனுடன் சேர்ந்தார். நடராஜன் வீசிய ஓவரில் ஷார்ட் பந்தை அடிக்க முயன்று ரிஷப் பந்த்திடம் கேட்ச் கொடுத்து லாபுஷேன் 108 ரன்களில் பெவிலியன் திரும்பினார். இதில் 9 பவுண்டரிகள் அடங்கும்.

கேமரூன் 28 ரன்களிலும், பெய்ன் ரன் 38 ரன்னிலும் களத்தில் உள்ளனர். ஆஸி. அணி 87 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 274 ரன்கள் சேர்த்துள்ளது.

Thanks for the source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *