Share on Social Media


ராம்தேவின் பேட்டிகளில் எப்போதும் காமெடிக்கும், சர்ச்சைக்கும் பஞ்சம் இருக்காது. கொரோனா ஆரம்பித்த நாள் முதல், கொரோனா வைத்து விசித்திர விநோதமாக ஏதேனும் மருந்துகளை பலர் அறிவித்துக்கொண்டுதான் வந்திருக்கிறார்கள். இந்தமுறை அந்த சர்ச்சையில் மத்திய அமைச்சர்களும் இணைந்திருப்பதுதான் இன்னும் கேலிக்கூத்தாகியிருக்கிறது.

கடந்த வெள்ளியன்று, பதஞ்சலி நிறுவனம் கொரோனில் என்னும் ஆயுர்வேத மருந்தை அறிமுகம் செய்தது. கொரோனா என்னும் பெருந்தொற்றுக்கு இம்யூன் பூஸ்டர்கள், சத்து டானிக்குகள், குடிநீர்கள் என இன்றளவிலும் ஆயிரம் மருந்துகள் வெளிவந்துவிட்டன. ஆனால், இவையெதுவும் இதுவரையில் யாராலும் அங்கீகரிக்கப்படவில்லை. பெரிதினும் பெரிதாக பப்ளிசிட்டி செய்யும் ராம்தேவ் நிறுவனம், இந்த கொரோனில் மருந்து விழாவுக்கு சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ வர்தனையும், போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரியையும் அழைத்திருந்தது. இந்த மருந்து அயூஷ் அமைச்சகத்தையின் சான்றிதழைப் பெற்றது என்றும், அது உலக சுகாதார மையத்தின் கீழ் தரப்படும் சான்றிதழ் என்றும் விளம்பரம் செய்ததுதான் சர்ச்சையாகியிருக்கிறது.

Coronil Baba Ramdev

கொரோனாவுக்கான மருந்துகளை எளிமையாக இரண்டாகப் பிரித்துவிடலாம். ஒன்று நம்மை கொரோனாவிடமிருந்து காப்பாற்றுவது, மற்றொன்று இம்யூனோ பூஸ்டர்கள். கொரோனா உச்சத்திலிருந்த கடந்த ஜூன் மாதத்தில், இதே கொரோனில் மருந்தை அறிமுகம் செய்தது பதஞ்சலி நிறுவனம். அதற்கு எந்தவித அறிவியல் ஆதாரமும் இல்லை என்பதால், கடும் சர்ச்சையானது. அப்போது, ஆயுஷ் அமைச்சகம் இந்த மருந்தை இம்யூனோ பூஸ்டர்களின் கீழ்தான் அறிவித்திருந்தது.

இப்போது புதிதுபுதிதாக உருமாறிய கொரோனா உலகெங்கிலும் உருவாகிக்கொண்டிருக்கும் சூழலில், மீண்டும் கொரோனிலை அறிமுகம் செய்திருக்கிறார்கள். ஆயுஷ் அமைச்சகத்தின் CoPP சான்றிதழைப் பெற்றிருக்கிறது கொரோனில். இதன்மூலம் இந்த மருந்தை 158 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய முடியும். இன்றளவிலும், இந்த மருந்து வெறும் supportive medicine தான்.

இம்யூனிட்டி பூஸ்டர்கள் உலகமெங்கிலும் விற்பதால், யாரும் இதைப் பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை. ஆனால், விளம்பர யுக்தியாக உலக சுகாதார மையத்தின் வழிகாட்டுதலின்படி என்றெல்லாம் பதஞ்சலி நிறுவனம், இந்த மருந்துக்கு விளம்பரம் வைக்கவே, பதறிப்போனது WHO அமைப்பு. கோவிட் தொற்றுக்கென எந்தப் பாரம்பர்ய மருந்தையும், WHO அமைப்பு அங்கீகரிக்கவில்லை என அறிவித்து தன் பெயரைக் களங்கத்திலிருந்து காப்பாற்றிக்கொண்டது.

Screenshot 2021 02 23 at 4 16 38 PM Tamil News Spot
ஹர்ஷ்வர்தன்

பிரச்னை இதோடு நிற்கவில்லை. கொரோனில் அறிமுக விழாவுக்குச் சென்ற நம் சுகாதாரத்துறை அமைச்சர், கொரோனில் மருந்தை ட்வீட்டுகளில் பாராட்டித் தள்ளினார். “ஆயுர்வேதத்தைப் பொறுத்தவரை ராம்தேவின் கனவென்பது, நம் அரசின் கனவு” என்பதாக அவரின் பேச்சிருந்தது. 35,000 கோடி ரூபாய்க்கு மேல் கொரோனா தடுப்பூசியில் செலவு செய்திருக்கும் நம் மத்திய அரசு, எந்தவித போதிய ஆதாரமும் இல்லாத ஒரு மருந்தை எப்படிப் பரிந்துரை செய்யலாம் என்பதுதான் தற்போதைய கேள்வி. அதிலும், இதை இந்தியன் மெடிக்கல் அசோசியேஷனே கேட்டிருக்கிறது.

கடந்த சில ஆண்டுகளாக மத்திய அரசின் ஊதுகுழலாக மத்திய நிறுவனங்கள் இருக்கும் நிலையில், இந்தியன் மெடிக்கல் அசோசியேஷன் ஹர்ஷவர்தனை விமர்சித்திருப்பது வரவேற்கத்தது.

மத்திய அமைச்சருக்கு, சில கேள்விகளையும் எழுப்பியிருக்கிறார்கள்.

  • ஒரு மத்திய அமைச்சராக இருந்துகொண்டு பொய்யான தகவல்களை இந்திய மக்கள் முன் பரப்புவது அறமா?

  • ஒரு மருத்துவராக இருந்துகொண்டு, இந்த மருந்துக்கான க்ளினிக்கல் சோதனைகள் பற்றி அறிவிக்க முடியுமா?

  • எத்தனை நோயாளிகளுக்கு இந்த மருந்தை சோதனை செய்து பார்த்திருக்கிறார்கள்?

logo who Tamil News Spot
WHO

WHO பரிந்துரை செய்யாத ஒரு மருந்தை, மத்திய அமைச்சர்கள் முன்னிலையில் வெளியிடுவதென்பது எவ்வளவு பெரிய தவறு என்பதை ராம்தேவ்கள் உணரப்போவதில்லை. ஆனால், இந்திய மக்களின் நம்பிக்கையைப் பெற்றிருக்கும் மத்திய அமைச்சர்கள் எந்தவித ஆதாரமும் இல்லாத மருந்துகளை இப்படிப் பரிந்துரை செய்வதென்பது எந்த வகையில் அறம் என மருத்துவர்கள் கேள்வி எழுப்பிவருகிறார்கள். ஒரு மருந்தின் நம்பகத்தன்மையை இத்தகைய வரவேற்பு, இன்னும் அதிகரிக்கவே செய்யும். இதை எப்போது மத்திய அமைச்சர்கள் புரிந்துகொள்வார்கள் என்றுதான் தெரியவில்லை.

WHO விளக்கத்துக்கும், IMA-வின் கேள்விகளுக்கும் இதுவரையில் எந்த மறுப்பும் மத்திய அமைச்சர்களும், பதஞ்சலி நிறுவனமும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *