Share on Social Media


தமிழ்நாடு நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், 2021-2022 ஆண்டுக்கான மனிதவள மேலாண்மைத் துறையின் மானியக் கோரிக்கை தொடர்பான உரையில் முக்கியமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். தமிழக சட்டமன்றத்தில் கடந்த செப்டம்பர் 13-ம் தேதி வெளியிடப்பட்ட அந்த அறிவிப்பில், “தமிழக அரசுத் துறைகளில் உள்ள பணியிடங்கள் மற்றும் மாநில பொதுத்துறை நிறுவனங்களில் உள்ள பணியிடங்கள் அனைத்திலும் தமிழக இளைஞர்களை 100 சதவிகிதம் நியமனம் செய்யும் பொருட்டு, தேர்வு முகமைகளால் நடத்தப்படும் அனைத்துப் போட்டித் தேர்வுகளிலும் தமிழ் மொழிப் பாடத்தாள் தகுதித் தேர்வாகக் கட்டாயமாக்கப்படும்” என்று அவர் குறிப்பிட்டார்.

பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்

அதன்படி, தமிழ்நாடு மனிதவள மேலாண்மைத் துறை அரசாணை ஒன்றை வெளியிட்டிருக்கிறது. அதில், டி.என்.பி.எஸ்.சி எனப்படும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் உட்பட தமிழ்நாட்டில் உள்ள அனைத்துத் தேர்வு முகமைகளால் அரசுப் பணிகளுக்காக நடத்தப்படும் போட்டித் தேர்வுகள் அனைத்திலும், நியமன அலுவலர்களால் தேவைப்படும் தேர்வுகளில் நடத்தப்படும் எழுத்துத் தேர்வுகளிலும் ,தமிழ்மொழித் தாளைத் தகுதித் தேர்வாகக் கட்டாயமாக்க அரசு முடிவு செய்திருக்கிறது என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.

தமிழக அரசின் இந்த ஆணை, பல தரப்பினரின் வரவேற்பைப் பெற்றிருக்கிறது. இந்த அரசாணையின் முக்கியத்துவம், அது ஏற்படுத்தவிருக்கும் மாற்றங்கள் ஆகியவை குறித்து தமிழ் அறிஞர்கள் மற்றும் கல்வியாளர்களிடம் பேசினோம். தமிழறிஞர் மறைமலை இலக்குவனார், “இந்த அரசாணையை வரவேற்க வேண்டியது ஒவ்வொரு தமிழரின் கடமை!” என்று பேச ஆரம்பித்தார்.

“ஜெயலலிதா உடல் நிலை சரியில்லாமல் இருந்த நேரத்தில் ஓ.பன்னீர்செல்வம் முதல்வரான பிறகு, ‘தமிழக அரசுப் பணிகளுக்கு வெளி மாநிலத்தவரும் அயல் நாட்டவரும் விண்ணப்பிக்கலாம்’ என்று ஓர் அரசாணையைக் கொண்டுவந்தார்கள். தமிழக இளைஞர்களின் வாழ்க்கையை சூறையாடுகிற, மிக மோசமான, கண்டிக்கத்தக்க அரசாணை அது. அதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. ஆனால், அந்த அரசாணையை முந்தைய அ.தி.மு.க அரசு கடைசிவரை மாற்றவில்லை.

marai1 Tamil News Spot
மறைமலை இலக்குவனார்

தமிழ்நாட்டில் 85 லட்சம் பேர் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவுசெய்திருக்கிறார்கள். அவர்களையும் சேர்த்து, ஒட்டுமொத்தமாக தமிழ்நாட்டில் ஒரு கோடி இளைஞர்கள் வேலை இல்லாமல் இருக்கிறார்கள். அவர்களுக்கு வேலை கொடுக்காமல், அயல் மாநிலத்தவருக்கு வேலை கொடுப்பது அநியாயமானது. தமிழகத்தில் தபால் அலுவலகம் உட்பட எந்த அரசு அலுவலகத்துக்குப் போனாலும், அங்கு வேறு மாநிலத்தவர் இருக்கிறார்கள். அவர்களுக்கு தமிழ் தெரியாதது மட்டுமல்ல, ஆங்கிலமும் பேசத் தெரியாது. என்ன ஒரு கொடுமை.

இந்த சூழலில்தான், தமிழக அரசு சிறப்பான ஓர் அரசாணையை வெளியிட்டிருக்கிறது. இந்த அறிவிப்பை தமிழ் அமைப்புகளும் தமிழறிஞர்களும் சத்தம் போட்டு வரவேற்க வேண்டும். மாநில உரிமையை காப்பாற்ற மிகவும் அவசியமான நடவடிக்கையாகவும் இதைப் பார்க்கிறேன்” என்றார் மறைமலை இலக்குவனார்.

இது குறித்து தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் ம.இராசேந்திரனிடம் பேசினோம்.

“மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டதன் நோக்கம், நிர்வாகம் சிறப்பாக செயல்பட வேண்டும் என்பதற்காகத்தான். அந்தந்த மாநிலத்தின் மொழியைக் கொண்டு அந்த மாநில மக்களுக்குப் பணியாற்ற வேண்டும் என்பது அதன் அடிப்படை. ஆகவே, அரசுப் பணிகளில் பணியாற்றுவர்கள் அந்தந்த மாநிலத்தின் மொழியைத் தெரிந்திருக்க வேண்டும். ஆங்கிலேயர் ஆட்சியின்போதுகூட, அரசுப் பணியிலிருப்பவர்கள் தமிழ் கற்றுக்கொள்வதற்காக இங்கு ஓர் அமைப்பு உருவாக்கப்பட்டது. ஆறு மாதங்களுக்குள் தமிழ் கற்றாக வேண்டும் என்பது ஒரு விதியாக இருந்தது.

ma ra Tamil News Spot
ம.இராசேந்திரன்

மத்திய அரசுத் தேர்வாணையத்தால் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் உள்ளிட்ட ஆட்சிப் பணிகளுக்குத் தேர்வு செய்யப்படுபவர்கள், எந்த மாநிலத்துக்கு ஒதுக்கப்படுகிறார்களோ, அந்த மாநிலத்தின் மொழியைக் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டும். பணி நியமனம் பெற்று ‘தகுதிகாண் பருவம்’ (முதல் இரண்டு ஆண்டுகள்) நிறைவடைவதற்குள், அந்த மொழியில் அவர்கள் தேர்ச்சிபெற்றிருக்க வேண்டும். அவர்களுக்கான மொழித் தேர்வை மாநில அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும். இவ்வளவு இருந்தும்கூட, தமிழ் தெரியாதவர்கள் அரசுப் பணிகளுக்கு வருவதற்கான வாய்ப்பு உருவாக்கப்பட்டுவிட்டது.

இந்த நிலையில், தமிழக அரசு எடுத்திருக்கும் நடவடிக்கை, இந்திய தேசிய ஒருமைப்பாட்டுக்கு வழிவகுக்கும். இந்தியாவின் ஆட்சிமொழிக் கொள்கையின்படி மாநிலங்கள் தங்கள் மொழியை ஆட்சிமொழியாக்கியக் கொள்ளலாம். அதன்படி, 1956-லேயே தமிழ் ஆட்சிமொழி என்று சட்டம் கொண்டுவரப்பட்டுவிட்டது. எனவே, தமிழ்நாட்டில் தமிழ் மட்டும்தான் ஆட்சி மொழி.

மத்திய அரசுடனும் பிற மாநில அரசுகளுடனும் ஆங்கிலத்தைப் பயன்படுத்தலாம். ஆனால், தமிழ்நாட்டுக்குள் தமிழைத்தான் பயன்படுத்த வேண்டும் என அந்தச் சட்டத்தில் இருக்கிறது. ஆனாலும், இன்னமும் 100 சதவிகிதம் என்கிற அளவுக்கு தமிழ் ஆட்சிமொழியாக ஆகவில்லை. அதை எட்டுவதற்கு, தமிழக அரசு இப்போது எடுத்திருக்கும் நடவடிக்கை உதவி செய்யும். உண்மையான ஜனநாயகத் தன்மையுடன் அரசு அதிகாரிகள் செயல்பட இது வழிவகுக்கும்.

stalin Tamil News Spot
முதல்வர் ஸ்டாலின்

இந்த நடவடிக்கை தமிழை வளர்க்கும் என்று தமிழ்ப் பற்றின் காரணமாக சொன்னாலும்கூட, அதை இரண்டாவதாக வைத்துக்கொள்வோம். முதலில், ஜனநாயகம் வளருவதற்கும் இந்திய அரசியலமைப்புச் சட்டம் சொல்லியிருப்பதன்படி நாம் நடைபோடுவதற்கும் இந்த நடவடிக்கை பயனுள்ளதாக இருக்கும்” என்றார் ம.இராசேந்திரன்.

Also Read: அதிமுக முக்கியப்புள்ளிகளின் திடீர் டெல்லி விசிட்; பின்னணி என்ன?

இது குறித்து மொழி நிகர்மை உரிமை பரப்பியக்கம் சார்பில் நம்மிடம் பேசிய ஆழி செந்தில்நாதன், “உள்துறை அமைச்சக அலுவல் பணிகள் அனைத்தையும் இந்தியில் மட்டுமே மேற்கொள்கிறோம் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பாரபட்சமாகப் பேசிவரக்கூடிய நிலையில், தமிழக அரசின் இந்த அறிவிப்பு வரலாற்று சிறப்புமிக்கது” என்றார்.

azhi2 Tamil News Spot
ஆழி செந்தில்நாதன்

தொடர்ந்து பேசிய அவர், “தமிழ்நாட்டின் தமிழர்கள் தங்கள் உரிமையை, உணர்வை விட்டுக்கொடுப்பவர்கள் அல்ல என்று மத்திய அரசுக்கு பறைசாற்றும் வகையில் இந்த அரசாணை அமைந்திருக்கிறது. இந்த வேளையிலே தமிழ்நாடு அரசுக்கு மேலும் ஒரு கோரிக்கையை முன்வைக்க விரும்புகிறோம். மத்திய அரசு நடத்துகிற எண்ணற்ற தேர்வுகளில் மாநில மொழிகளில் கேள்வித்தாள் வழங்கப்படுவதில்லை.

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம், தேசியத் தேர்வு முகமை உள்ளிட்ட பல மத்திய அரசின் தேர்வு முகமைகள் நடத்துகிற தேர்வுகளில், தேர்வர்களுக்கு அந்தந்த மாநில மொழிகளிலும் கேள்வித்தாள் வழங்கப்பட்டு, அவரவர் மாநில மொழிகளிலேயே பதிலளிக்க வழிவகை செய்ய மத்திய அரசுக்கு சட்ட ரீதியாக, அலுவல் ரீதியாக என எல்லா வகைகளிலும் அழுத்தத்தை ஏற்படுத்த வேண்டும். மறைந்த முதல்வர் கருணாநிதியின் உயிலாகக் கருதப்படும் ‘மத்தியிலே கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி’ என்கிற 1974-ம் ஆண்டு தீர்மானத்தின் வழிநடக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் தமிழக அரசிடம் முன்வைக்கிறேன்” என்றார்.Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published.