அமேதி: நான் முதல்முறையாக தேர்தலில் போட்டியிட்ட அமேதி தொகுதி மக்கள் தான் அரசியலுக்கு வழிகாட்டினார்கள் என ராகுல் தெரிவித்துள்ளார்.

உத்தரபிரதேசத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அமேதியில் மத்திய அரசை கண்டித்து, விலைவாசி உயர்வு மற்றும் பணவீக்கத்திற்கு எதிராக இன்று காங்கிரஸ் சார்பில் பேரணி நடைபெற்றது. இந்த பேரணியில் பங்கேற்ற ராகுல் இவ்வாறு பேசினார். காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளரும் உத்தரபிரதேச மாநில தேர்தல் பொறுப்பாளருமான பிரியங்கா உள்ளிட்டோர் இப்பேரணியில் கலந்து கொண்டனர்.
ராகுல் மேலும் பேசியதாவது: மத்திய அரசு மீது மக்களுக்கு கோபம் மட்டுமே உள்ளது. நான் 2004ல் அரசியலுக்கு வந்தேன். அமேதி தொகுதியில் தான் முதல்முறையாக தேர்தலில் போட்டியிட்டேன். அமேதி மக்கள் அரசியல் பற்றி எனக்கு நிறைய கற்றுக் கொடுத்துள்ளனர். நீங்கள் தான் எனக்கு அரசியலுக்கான வழியை காட்டினீர்கள். ‘என் இதயத்தில் அமேதி மக்களுக்கு முன்பு போலவே இடமுண்டு. நாங்கள் இன்னும் அநீதிக்கு எதிராக ஒன்றுபட்டு உள்ளோம். உங்கள் அனைவருக்கும் நன்றி இவ்வாறு ராகுல் பேசினார்.

காங்கிரசின் கோட்டையாக விளங்கிய அமேதி தொகுதியில், கடந்த தேர்தலில் ராகுல் , பாஜக வேட்பாளர் ஸ்மிருதி இரானியிடம் தோல்வியடைந்தார். அதன்பின்னர் 2வது முறையாக ராகுல் அமேதிக்கு வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Advertisement