Share on Social Media


எப்போதும் உங்கள் சட்டைப் பையில் ஜெயலலிதாவின் புகைப்படத்தை வைத்திருக்கிறீர்கள். அவர்களுடனான ஒரு நல்ல நினைவை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்?

“புரட்சித் தலைவி அம்மா எனக்கு எப்போதும் தெய்வம்தான். இப்போது எனக்கு இருக்கும் அனைத்து கஷ்டங்களையும் அவர்களுக்காகத்தான் பொறுத்துக் கொண்டிருக்கிறேன். மாவட்டம் தொடங்கி, மாநிலத் தலைமை வரை எனக்கு பல்வேறு பதவிகளைக் கொடுத்து அழகு பார்த்தவர் அம்மா. புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். தி.மு.க-விலிருந்து விலகி வந்ததிலிருந்து அவருடன் என்னுடைய தந்தை இருந்திருக்கிறார். பல்வேறு பொறுப்புகளிலிருந்தாலும் அவரைப் பற்றி அம்மாவுக்குத் தெரியாது. நான் கல்லூரி படிக்கும் காலகட்டத்திலிருந்தே வேகமாக இருப்பேன். அப்போதே மாணவர் அணி, இளைஞர் அணி எனப் பல்வேறு பொறுப்புகளை எனக்குக் கொடுத்திருந்தார். அதற்குப் பிறகு ஒன்றியச் செயலாளராகவும் 2001-ம் ஆண்டில் சேர்மனாகவும் ஆக்கினார்கள். 2006-ல் என்னை அழைத்து சட்டமன்ற உறுப்பினராக போட்டியிட வாய்ப்பு வழங்கினார்கள். எனக்கு வேண்டாம். நீங்கள் யாரை நிறுத்தினாலும் நான் வெற்றி பெறச் செய்கிறேன் என்றேன். இல்லை இல்லை நீங்கள்தான் நிற்க வேண்டும் எனக் கட்டாயப்படுத்தி என்னை எம்.எல்.ஏ-வாகப் போட்டியிடச் செய்தார். 2006-ல் முதல் முறையாக எம்.எல்.ஏ ஆனேன். கோவையில் செம்மொழி மாநாடு நடத்தத் திட்டமிட்டபோது கோவையில் ஓர் ஆர்ப்பாட்டம் நடத்த எங்களுக்கு அனுமதி வேண்டும். யாராவது ஒரு தலைவரை அனுப்புங்கள் எனக் கேட்டிருந்தேன். ஆனால், அம்மா நானே வருகிறேன் எனச் சொல்லி ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டார். மிகப்பெரிய ஆர்ப்பாட்டம் அது. அதுவரை தி.மு.க-தான் ஆட்சி அமைக்கும் என்றிருந்த நிலைமை மாறி அதன் பின் அ.தி.மு.க மிகப்பெரிய வெற்றியைப் பதிவு செய்ய அந்த ஆர்ப்பாட்டம் ஒரு காரணமாக இருந்தது. அப்போது என்னை அழைத்துப் பாராட்டினார்கள். 2011-ல் வெற்றி பெற்றபின் அமைச்சராக்கினார், அதன்பின் 2014-ல் உள்ளாட்சி உள்ளிட்ட சில துறைகளுக்கு அமைச்சராக்கினார். கேரளாவின் பொறுப்பாளராக நியமித்தார்கள். அங்கே 8 கவுன்சிலர் இடங்களில் வெற்றி பெற வைத்தேன். என் பெயரைச் சுட்டி அறிக்கை வெளியிட்டார். சாதாரணமான என்னை இவ்வளவு உயரத்துக்கு கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறார். இன்று முதல்வர் என்னை விமர்சிக்கிறார் என்றால் அந்த இடத்துக்கு என்னை அழைத்து வந்தவர் அம்மா தான். இப்போதில்லை எப்போதும் தி.மு.க எதிர்ப்பில் மிகத் தீவிரமாக இருப்பேன்.”

ஜெயலலிதா இல்லாதது உங்களுக்குத் தனிப்பட்ட முறையில் எந்த வகையில் இழப்பு?

“அம்மா இல்லாதது தனிப்பட்ட முறையில் எனக்கு மிகப்பெரிய இழப்பு. தனிமையில் இருக்கும் போதெல்லாம் அவருடனான என்னுடைய நாள்களை நான் நினைத்துக்கொள்வேன். அவர் இருந்திருந்தால் எனக்கு இந்த துன்பங்கள் எதுவுமே இருந்திருக்காது. எனக்கு வரும் எல்லாப் பிரச்னைகளையும் அவரே பார்த்து கொள்வார். அம்மா இல்லாத இந்தச் சூழலில் கட்சியைக் காக்க வேண்டும் என்ற பொறுப்பு எனக்கு இருக்கிறது என நினைக்கிறேன். அதற்காகச் செயலாற்றி வருகிறேன்.”



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *