Share on Social Media


நியூயார்க்: ”ஐக்கிய நாடுகள் சபை உலக நாடுகளின் குரலாக இருக்க வேண்டும். அதற்கு பாதுகாப்பு கவுன்சில் உட்பட ஐ.நா., அமைப்புகளில் சீர்திருத்தங்கள் செய்ய வேண்டும். ஆனால் சில குறிப்பிட்ட நாடுகள் இதற்கு தடையாக உள்ளன,” என, நம் வெளியுறவுத் துறை இணையமைச்சர் மீனாட்சி லேகி குறிப்பிட்டார்.

பா.ஜ.,வைச் சேர்ந்த மீனாட்சி லேகி, வெளியுறவுத் துறை இணையமைச்சராக பதவியேற்ற பின், தன் முதல் வெளிநாட்டு பயணத்தை மேற்கொண்டுள்ளார். கொலம்பியா பயணத்தை முடித்து அவர், நியூயார்க் சென்றுள்ளார். அங்கு ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் உட்பட பல நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். ஐ.நா., பொதுச் செயலர் அன்டோனியா கட்டரஸ், துணைப் பொதுச் செயலர் அமினா முகம்மது உள்ளிட்டோரையும் சந்தித்து பேசினார்.

இது குறித்து அவர் கூறியுள்ளதாவது:உலக நாடுகளை ஒருங்கிணைக்கும் வகையில் ஐ.நா., அமைப்பு உருவாக்கப்பட்டு 75 ஆண்டுகளாகிறது. இத்தனை ஆண்டு களில் உலகெங்கும் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. ஆனால் ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் உள்ளிட்ட அமைப்புகள் இன்னும் 1945 மன நிலையிலேயே உள்ளன.தற்போதுள்ள உலகின் குரலை ஒலிக்கும் வகையில் பாதுகாப்பு கவுன்சில் உட்பட ஐ.நா., அமைப்புகள் இல்லை. இதன் மூலம் அவை உருவாக்கப்பட்டதன் நோக்கமே முறியடிக்கப்பட்டுள்ளது. பலதரப்பினர் இணைந்த கூட்டமைப்பாக இந்த அமைப்பு இல்லை. குறிப்பிட்ட சில நாடுகளின் கட்டுப்பாட்டில் உள்ளது. அதனால்தான் பாதுகாப்பு கவுன்சில் உள்ளிட்டவற்றில் சீர்திருத்தம் செய்யப்பட வேண்டிய காலம் வந்துவிட்டது என, பிரதமர் நரேந்திர மோடி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.

பாதுகாப்பு கவுன்சிலில் உறுப்பினராக இந்தியாவுக்கு அனைத்து தகுதிகளும் உள்ளன. சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படாததால் ஐ.நா., சபை, தன் மரியாதையை இழந்து வருகிறது. அதன் நம்பகத்தன்மையும் சரிந்து வருகிறது. சீர்திருத்தங்கள் மேற்கொள்வதற்கு பெரும்பாலான நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன. அவற்றின் உதவியோடு சீர்திருத்தங்கள் மேற்கொள்வதற்கு தேவையான அனைத்து முயற்சிகளையும் இந்தியா எடுக்கும். சீர்திருத்தம் தேவை என வெறும் வாய் வார்த்தைகளை மட்டும் கூறும் சில நாடுகளே, சீர்திருத்தம் மேற்கொள்வதற்கு தடையாக உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *