
அமெரிக்காவில் நேற்று முன்தினம் இரவு வீசிய பயங்கர சூறாவளிக் காற்றுக்கு 90-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். ஏராளமானோர் காயமடைந்தனர்.
அமெரிக்காவின் தென்கிழக்கு பகுதியில் கடந்த சில தினங் களுக்கு முன்பு சக்தி வாய்ந்த சூறாவளி உருவாகி இருப்பதாகவும். இது கென்ட்டகி மாகாணத்தை கடந்து செல்லும் எனவும்வானிலை மையம் எச்சரித்திருந்தது. இதன்படி, நேற்று முன்தினம்நள்ளிரவு, கென்ட்டகி மாகாணத்தை சூறாவளிக் காற்று தாக்கியது. ஆனால், யாரும் எதிர்பாராதவிதமாக 12-க்கும் மேற்பட்ட சூறாவளிகள் அடுத்தடுத்து உருவாகி கென்ட்டகி மாகாணத்தை நிலைக்குலையச் செய்தன. மணிக்கு சுமார்150 கி.மீ. வேகத்தில் வீசிய இந்தசூறவாளிகளால் நூற்றுக்கணக் கான வீடுகள் தரைமட்டமாகின. பல கார்கள், மோட்டார் சைக்கிள்கள் உள்ளிட்ட வாகனங்கள் தூக்கி வீசப்பட்டன.
இதற்கிடையே, அந்த மாகாணத்தின் மேஃபீல்டு நகரில் உள்ள ஒரு மெழுகுவர்த்தி தொழிற் சாலையின் மேற்கூரை இடிந்துவிழுந்ததில் அங்கு இரவுப்பணியில் இருந்த 70-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உயிரி ழந்தனர்.
அதேபோல, அங்குள்ள அமேசான் குடோனின் ஒருபகுதி இடிந்து விழுந்ததில் 6-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உயிரிழந்தனர். இந்த இரு சம்பவங்களிலும் ஏராளமான தொழிலாளர்கள் இடிபாடுகளில் சிக்கியுள்ளனர். அவர்களை மீட்கும் பணியில் பேரிடர் மீட்புப் படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த சூழலில், கென்ட்டகி மாகாணத்தை மட்டுமல்லாமல் அதன் அண்டை மாகாணங்களான டென்னிசி, அர்கான்சஸ் ஆகிய மாகாணங்களிலும் சூறாவளி கோரத் தாண்டவம் ஆடியது. இதனால் 10 பேர் உயிரிழந்திருப்பதாக மேற்கூறிய இரு மாகாண அரசுகள்தெரிவித்துள்ளன. நூற்றுக்கணக் கானோர் காயமடைந்து மருத்துவ மனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுகுறித்து அதிபர் ஜோ பைடன் கூறும்போது, “அமெரிக்க வரலாற்றிலேயே இவ்வளவு சக்திவாய்ந்த சூறாவளிகளை நாம் பார்த்ததில்லை. பருவநிலை மாற்றமே இதுபோன்ற இயற்கை சீற்றத்திற்கு காரணம் என புரிந்து கொள்ள முடிகிறது. சூறாவளி பாதிப்புக்கு உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்தஇரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் மாகாண அரசுகளுக்கு மத்திய அரசு ஒத்துழைக்கும்” என்றார்.