Share on Social Media


மறுமணத்தில் இணையும் கணவனோ அல்லது மனைவியோ அவர்களில் யாராவது ஒருவருக்கு குழந்தை இருந்தால், அந்த குழந்தையாலும் புதுவிதமான பிரச்சினைகள் முளைக்கின்றன.

மறுமணங்கள் தற்போது பெருகிக்கொண்டிருக்கின்றன. கணவனை இழந்த பெண்களும், மனைவியை இழந்த ஆண்களும் தனிமையில் இப்போது அதிககாலத்தை செலவிட விரும்புவதில்லை. முடிந்த அளவு சீக்கிரமாகவே தனக்கு ஒரு துணையை தேடிக்கொண்டு புதியவாழ்க்கையைத் தொடங்க விரும்புகிறார்கள். இது மகிழ்ச்சியான விஷயம்தான் என்றாலும், அந்த மறுமணத்திலும் சில நேரங்களில் பிரச்சினைகள் தலைதூக்குகின்றன. அதற்கு புதிதாக வாழ்க்கையில் இணையும் அந்த கணவனோ அல்லது மனைவியோ மட்டும் காரணமில்லை. அவர்களில் யாராவது ஒருவருக்கு குழந்தை இருந்தால், அந்த குழந்தையாலும் புதுவிதமான பிரச்சினைகள் முளைக்கின்றன.

மறுமணத் தம்பதிகளுக்கு குழந்தைகளால் ஏற்படும் பிரச்சினைகளை உணர்த்தும் இரண்டு சம்பவங்கள்!

ஒன்று: அவருக்கு 45 வயது. கல்லூரி ஒன்றில் பேராசிரியராக பணியாற்றிக்கொண்டிருக்கிறார். அவரது மனைவி நான்கு வருடங் களுக்கு முன்பு நோய்வாய்ப்பட்டு இறந்திருக்கிறார். அவர்களது மகனுக்கு 15 வயது. பள்ளியில் படித்துக்கொண்டிருக்கிறான். மனைவியை இழந்த அந்த பேராசிரியர், கணவரை இழந்த ஒரு பெண்ணை ஆறு மாதங்களுக்குமுன்பு மறுமணம் செய்திருக்கிறார். அந்த பெண்ணுக்கு முதல் கணவர் மூலம் குழந்தை ஏதும் இல்லை.

அந்த 15 வயது சிறுவன், தாயை இழந்த பின்பு தந்தையின் அன்புப் பிடிக்குள் வளர்ந்து வந்திருக்கிறான். அமைதியான சுபாவம் கொண்டவனாக இருந்திருக்கிறான். ஆனால் புதிய தாயார் வந்ததில் இருந்து அவனுக்குள் வன்மம் வளர்ந்துவிட்டது.

தனது புதிய மனைவியோடு அந்த பேராசிரியர் ஆலோசனை பெற வந்திருந்தார். கலங்கிய கண்களோடு அவர், ‘என் மகனிடம் ஏற்பட்டிருக்கும் மாற்றங்களைகண்டு நான் அதிர்ந்து போயிருக்கிறேன். வீட்டில் நின்றிருந்த காரை ஓட்டி பக்கத்து ஊருக்குகொண்டு சென்று அங்கு நடுரோட்டில் விட்டுவிட்டு வந்துவிட்டான். இவளது புடவைகளை எல்லாம் எடுத்துச்சென்று தீவைத்து எரித்துவிட்டான். நடுராத்திரி திடீரென்று எழுந்துவந்து எங்கள் படுக்கை அறை கதவை அடித்து உடைப்பதுபோல் பலமாக தட்டுகிறான்’ என்றார்.

இரண்டு: கணவரை விவாகரத்து செய்து பத்தாண்டுகள் ஆகிவிட்ட, 35 வயதுபெண் அவள். அவளது மகளுக்கு 12 வயது. பயிற்சி நிலையம் ஒன்றை நடத்தி வரும் அவள், சுயதொழில் செய்து வரும் 32 வயது இளைஞரை மறுமணம் செய்திருக்கிறாள். அவருக்கு இதுதான் முதல் மணம். இவர்கள் வாழ்க்கையில் இணைந்து ஒரு மாதம் தான் ஆகியிருக்கிறது.

மகளுடன் வந்திருந்த பயிற்சி நிலைய பெண், ‘நானும், அவரும் நாலைந்து வருடங்களாக பழகிக்கொண்டிருக்கிறோம். அப்போது அவர் நட்புரீதியாக அடிக்கடி எனது வீட்டிற்கு வருவார். என் மகளுடனும் பேசுவார். எங்களை வெளியிடங்களுக்கு அழைத்தும் செல்வார். அப்போதெல்லாம் இவள், அவர் மீது அன்பு செலுத்தத்தான் செய்தாள். நான் அவரை மறுமணம் செய்துகொள்ளப்போகும் தகவலை முதலிலே இவளிடம் தெரிவித்தேன். இவள் வெளிப்படையாக ஆதரவு தெரிவிக்கவில்லை. காலப்போக்கில் சரியாகிவிடுவாள் என நினைத்து நாங்கள் திருமணம் செய்துகொண்டோம்.

அவர் நண்பராக வந்தபோதெல்லாம் மகிழ்ச்சியாக காணப்பட்ட இவள், அவர் என் கணவராக வந்த நாளில் இருந்து கவலைமிகுந்தவளாகி விட்டாள். எப்போதும் சுறுசுறுப்பாக இருக்கும் இவள் சிறகொடிந்த பறவை போன்று காணப்படுகிறாள். சரியாக சாப்பிடுவதில்லை. என்னிடம்கூட முகம் கொடுத்துபேசுவதில்லை. படிப்பிலும் பின்தங்கிவிட்டாள்…’ என்று வருத்தத்தோடு கூறினாள். அருகில் அமர்ந்திருந்த அந்த சிறுமியோ எந்த உணர்ச்சியையும் வெளிக்காட்டாமல் எதிலும் பிடிப்பற்றவளைப் போன்று காணப்பட்டாள்.

இனி இதில் பொதுவான விஷயங்களை அலசுவோம்! இறப்பு அல்லது விவாகரத்து மூலம் வாழ்க்கைத்துணையை இழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டிருக்கிறது. அவர்கள் மறுமணம் செய்து, அந்த வெற்றிடத்தை நிரப்பிக்கொள்ளவேண்டும் என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை. இது ஆண், பெண் இருபாலினருக்கும் பொதுவானது. இத்தகைய மறுமணங்கள் வெற்றியடைய வேண்டும் என்றால், புதிதாக வாழ்க்கையில் இணையும் அந்த தம்பதிகள் இரண்டு விஷயங்களில் அதிக கவனம் செலுத்தவேண்டும்.

முதலில் அவர்கள் இருவரும் உடல்ரீதியாகவும், மனோரீதியாகவும், கருத்துரீதியாகவும் பொருத்தம் கொண்டிருக்கவேண்டும். இரண்டாவதாக அந்த தம்பதிகளில் யாருக்காவது குழந்தை இருந்தால் (அல்லது இருவருக்குமே குழந்தைகள் இருந்தால்) அந்த குழந்தைகளும் மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளும் விதத்தில் அந்த மறுமணம் அமையவேண்டும். அப்படி அமைந்தால்தான் அந்த வாழ்க்கை வெற்றியடையும்.

கணவன், மனைவி, குழந்தை ஆகிய மூன்று பேரை கொண்ட ஒரு குடும்பத்தை உதாரணத்திற்கு எடுத்துக்கொள்வோம். அதில் மனைவிக்கு தனது கணவரை பிடிக்காமல் போகலாம். ஆனால் தன்னைப்போன்று தனது குழந்தைக்கும் அவரை (அவனது அப்பாவை) பிடிக்காது என்று அவள் கருதிவிடக்கூடாது. தனக்கு கணவரை பிடிக்காமல் போவதற்கு பல காரணங்கள் அவளுக்கு இருப்பதுபோல், தனக்குதன் அப்பாவை பிடிக்கும் என்பதற்கும் அந்த குழந்தையிடமும் பல காரணங்கள் இருக்கும்.

அவர்கள் இருவருக்குள்ளும் பிரச்சினைகள் அதிகரித்து, விவாகரத்தும் ஏற்பட்டு பிரிந்துவிடுகிறார்கள் என வைத்துக்கொள்வோம். அப்போது சட்டப்படி அந்த குழந்தை தாயிடம் வந்து, வளர்ந்து கொண்டிருந்தாலும் அது தனது தந்தையை முழுமையாக புறக்கணித்துவிடும் என்றோ, தன்னைப் போன்று அவர் மீது நிரந்தரமாக பகை உணர்ச்சி கொண்டிருக்கும் என்றோ அந்த தாய் கருதிவிடக்கூடாது.

கணவனும், மனைவியும் வெவ்வேறு பெற்றோருக்கு பிறந்து திருமணத்தால் ஒன்றிணைபவர்கள். வெவ்வேறு குடும்பங்களில் இருந்துவந்த அவர்களுக்குள் கருத்து வேறுபாடுகளும், வித்தியாசங்களும் இருக்கத்தான் செய்யும். வித்தியாசங்களின் முடிவில் விவாகரத்தை நோக்கிச் செல்லவும் அவர்கள் மனதளவில் தயாராகி விடுவார்கள். ஆனால் குழந்தை என்பது தாயும், தந்தையும் இணைந்து பெற்றெடுத்தது. அந்த குழந்தை எப்போது அவர்களுக்கு பிறக்கிறதோ, அப்போதே அந்த குழந்தைக்கு அப்பா அவர் மட்டும்தான் என்பது உறுதியாகிவிடுகிறது. அந்த குழந்தையின் மரணம் வரை அவர் மட்டுமே அப்பா.

இந்தநிலையில் தன் தாய் யாரை மறுமணம்செய்து கொண்டாலும், ‘அம்மாவுக்கு புதியகணவர் கிடைத்திருக்கிறார்’ என்றுதான் குழந்தை கருதுமே தவிர, ‘தனக்கு புதிய அப்பா கிடைத்திருக் கிறார்’ என்ற சிந்தனை அவ்வளவு சீக்கிரத்தில் எந்த குழந்தைக்கும் ஏற்படாது.

பொதுவாக தாய் மீண்டும் கர்ப்பமாகி இன்னொரு குழந்தையை பெற்றெடுத்ததும், ‘தனக்கு கிடைக்க வேண்டிய முக்கியத்துவம் குறைந்து போய்விடுமோ!’ என்று கவலைப்பட்டு முரண்டு பிடிப்பது முதல் குழந்தைகளின் இயல்பு. அப்படிப்பட்ட மனோபாவம் கொண்ட குழந்தைகள், மறுமணத்தின் மூலம் ‘தனக்கும்-தன் தாய்க்கும் இடையில் இன்னொருவர் வருவதை’ ஏற்றுக்கொள்ள ரொம்ப சிரமப்படும்.

அதனால் மறுமணம் செய்து கொள்ளும் பெண்கள், ‘நான் இவரை திருமணம் செய்துகொள்ளப்போகிறேன். இனி இவர்தான் உன் அப்பா’ என்று திடீரென்று அறிமுகம் செய்வதை தவிர்க்கவேண்டும். அந்த திடீர் அறிவிப்பு தாய் மீது அந்த குழந்தை கொண்டிருக்கும் நம்பகத்தன்மையை குறைத்து, அதனிடம் எதிர்காலத்தைப் பற்றிய பயத்தை உருவாக்கிவிடும்.

இதை எல்லாம் நினைத்து கணவரை இழந்தபெண்ணோ, மனைவியை இழந்த ஆணோ வருந்த வேண்டியதில்லை. அவர்கள் மறுமணத்திற்கு தயாராகவேண்டும். அவர்கள் தயாராகும்போது, தங்கள் குழந்தையையும் அந்த சூழ்நிலையை உணர்ந்துகொள்ள தயார்படுத்தவேண்டும். அதற்கு அன்பு செலுத்துவதும், நம்பிக்கையூட்டுவதும், சமூக சிக்கல்களை புரியவைப்பதும் அவசியம். அதற்கு குறைந்தது ஆறு மாதமாவது தேவைப்படும்.

அந்த 6 மாதத்தில் என்ன செய்யவேண்டும்?

தாயை இழந்து தந்தையின் பராமரிப்பில் வளர்ந்துகொண்டிருக்கும் மகன் என்றால், அவனுக்குள் தாய்மையின் ஏக்கம் இருந்து கொண்டுதான் இருக்கும். அந்த தவிப்பை, குழந்தை வெளிப்படுத்தும் தருணங்களில் ‘அதற்கான வாய்ப்புகளை நானும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்’ என்பதுபோல் பேசி, மறுமணம் பற்றி மகனுடனும் கலந்துரையாடவேண்டும். அவன் தற்போது படிப்பதற்கும், பின்பு வேலைக்கும் வெளியே செல்லும்போது தனக்கு வீட்டில் தனிமை ஏற்படும் என்பதையும், பாதுகாப்பின்மை உருவாகும் என்பதையும் உணர்த்த வேண்டும்.

இப்படி எல்லா விஷயங்களையும் விவாதித்து, புதிதாக குடும்பத்திற்குள் வர இருக்கும் பெண்ணையும் அறிமுகப்படுத்தி இருவருக்குள்ளும் ஒரேமாதிரியான எண்ண அலைகளை உருவாக்கவேண்டும். இதற்காக தெளிவான முடிவை எடுக்கவும், நெருக்கமானவர்களை சிந்தனைரீதியாக ஒருங்கிணைக்கவும் தியானம், மியூசிக்தெரபி, கவுன்சலிங் போன்றவை உதவும்.

இதில் இன்னொரு முக்கியமான விஷயம். தாயோ, தந்தையோ மறு மணம் செய்யும்போது, திருமணத்திற்கு பின்னாலும் குழந்தைகளால் பிரச்சினைகள் எழலாம். தான் தனிமைப்படுத்தப்படுவது போலவோ, தன்னை அலட்சியப் படுத்துவது போலவோ அந்த குழந்தை கருதலாம். அதனை சரி செய்ய புதிதாக அந்த குடும்பத்திற்குள் வரும் பெண் (அல்லது ஆண்) பக்குவம் நிறைந்தவராக இருக்கவேண்டும். தியாக மனப்பான்மையும் கொண்டிருக்க வேண்டும். அதெல்லாம் இருந்தால்தான் மறுமண வாழ்க்கையை மகிழ்ச்சியாக அமைத்துக்கொள்ள முடியும்.

– விஜயலட்சுமி பந்தையன்.


https://www.youtube.com/watch?v=videoseries

Thanks for the Source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *