Share on Social Media

190 ரன்களை அன்வர் எட்டியபோது, 1984-ம் ஆண்டு, ஒருநாள் போட்டியொன்றில், ஒரு வீரர் அடித்த அதிகபட்ச ஸ்கோரான 189 ரன்களை எடுத்திருந்த விவியன் ரிச்சர்ட்ஸ் நிகழ்த்தியிருந்த சாதனையை, முறியடித்தார்.

இரட்டைச் சதத்தை எடுத்து விடுவார் என்று எல்லோரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த சமயத்தில், சச்சின் வீசிய பந்தை அன்வர் அடிக்க, அது ஃபைன் லெக்கில் நின்றிருந்த கங்குலியிடம் கேட்சாக மாறி, 47 ஓவர்கள் நின்று விளையாடிய அன்வரை வெளியேற்றியது. 146 பந்துகளில், 194 ரன்களை விளாசியிருந்த அவரது இன்னிங்ஸில், 22 பவுண்டரிகளும், 5 சிக்ஸர்களும் அடக்கம். பரம்பரை பகை எல்லாம் மறந்து, அவரைப் பாராட்டும் விதமாக, ஸ்டேடியத்தில் இருந்த மொத்த ரசிகர்களும் எழுந்து நின்று, கைதட்டி, மரியாதை தந்து அவரை கௌரவித்தது எல்லைகள் தாண்டியும், திறமை அங்கீகரிக்கப்படும் என்னும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. அன்றைய தினம், 327 ரன்களைக் குவித்திருந்தது, பாகிஸ்தான். இதில், 59 சதவிகிதம் ரன்களை, அன்று அன்வர் மட்டுமே அடித்திருந்தார்.

தொடர்ந்து விளையாடிய இந்திய இன்னிங்ஸில், டிராவிட் தனது ஒருநாள் போட்டிகளுக்கான, மெய்டன் சதத்தை அடித்திருந்தார். வினோத் காம்ப்ளியும் அரைசதம் கடந்திருந்தார், எனினும், அன்வருக்கு இணையான ஒரு ஆட்டத்தை இந்தியாவின் சார்பில், யாராலும் அன்று ஆட முடியாமல் போக, 49.2 ஓவர்களிலேயே 292 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது இந்தியா. பாகிஸ்தான் சார்பில், ஜாவத் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தி இருந்தார். 35 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பாகிஸ்தான், இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

அன்வர் நிகழ்த்திய இந்தச் சாதனையை, 2009-ம் ஆண்டு, ஜிம்பாப்வேவின் சார்லஸ், பங்களாதேஷுக்கு எதிரான போட்டியில், தான் அடித்த, 194 ரன்கள் மூலமாக சமன் செய்தார். சாதனைகளின் சமுத்திரமான சச்சின், அதற்கு அடுத்த ஆண்டே, தன்னுடைய இரட்டைச் சதத்தின் வாயிலாக, அன்வரின் சாதனையை முறியடித்தார். எனினும் 97-ம் ஆண்டு இருந்த பேட்ஸ்மென்களுக்கான வரையறைகளை மீறி, அன்வர் எடுத்த 194 ரன்கள், உண்மையில் மூன்று சதங்களுக்குச் சமம் என்றே சொல்லலாம்.

விவியன் ரிச்சர்ட்ஸுக்கு முன்னதாக, அதிகபட்ச ஸ்கோருக்கான (171) ரெக்கார்டை தன் வசம் வைத்திருந்த, கிளென் டர்னர், அன்வரின் இன்னிங்ஸைப் பற்றி, கமெண்டரி பாக்ஸில் இருந்து பேசும் போது, “கிட்டத்தட்ட, 30 ஓவர்கள் ரன்னர் வைத்து ஓடியதால் மட்டுமே, அன்வரால், இந்தச் சாதனையை நிகழ்த்த முடிந்தது” என மறைமுகமாக வெறுப்பை உதிர்த்திருந்தார். இன்னும் சிலரோ, இந்தப் போட்டியில், ஶ்ரீநாத் இருந்திருந்தால், அன்வரின் விக்கெட்டை இந்தியா சுலபமாக வீழ்த்தி இருக்கும் என கருத்துக் கூறி இருந்தனர். ஆனால், கேப்டன் சச்சின், “தான் வாழ்நாளில் பார்த்த சிறந்த இன்னிங்ஸ்களில் ஒன்று இது!” என்று, அன்வருக்குப் புகழாரம் சூட்டி இருந்தார். சமீபத்தில், அஷ்வின் தான் நேரில் கண்டு அசந்துபோன இன்னிங்ஸ் இது என்றும், அதன்பிறகும் பலமுறை இதை ஹைலைட்ஸில் பார்த்து ரசித்திருக்கிறேன் என்றும் கூறி இருந்தார்.

போட்டிக்குப் பிந்தைய பேட்டியில் பேசிய அன்வர், தன்னுடைய ஒருநாள் போட்டி சதங்களிலேயே, இதுதான் மிகச் சிறந்தது என்றும், வெயில், ஈரப்பதத்தை சமாளித்து விளையாட மிகவும் கஷ்டப்பட்டதாகவும், அஃப்ரிடியின் பங்கு தன்னுடைய 194-ல் மிக முக்கியமானது என்றும் கூறி இருந்தார்.

எது எப்படியெனினும், அன்றைய தினம், அன்வர் ஆடியது, ஒரு அற்புதமான இன்னிங்ஸ். டைமிங், பேலன்ஸ், கன்ட்ரோல், ஃபுட் வொர்க், ரிஸ்ட் வொர்க், ஷாட் செலக்ஷனஸ், கண்கள் கைகளுக்கு இடையேயான ஒருங்கிணைப்பு என அத்தனையும் கனகச்சிதமாக இருந்த அந்த இன்னிங்ஸ், இதுவரை ஆடப்பட்டுள்ள தலைசிறந்த இன்னிங்ஸ்களில் ஒன்றென்றால் மிகையாகாது.

Thanks for the source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *