Share on Social Media


திண்டிவனம்: கூட்டணி பேச்சுவார்த்தைக்கு சென்ற அமைச்சர்களிடம் துணை முதல்வர் பதவி, அதிக சீட் உள்ளிட்ட  நிபந்தனைகள் விதித்ததால் அதிர்ச்சி அடைந்த அமைச்சர்கள், அடுத்த கட்டமாக பேச முடியாமல் திணறினர். இதனால்,  அமைச்சர்களை ராமதாஸ் திருப்பி அனுப்பியதால் அதிமுக-பாமக கூட்டணியில் விரிசல் ஏற்படும் சூழல் நிலவுகிறது. தமிழக சட்டபேரவை தேர்தலுக்கு இன்னும் 4 மாதங்களே உள்ளதால், அனைத்து அரசியல் கட்சிகளும் கூட்டணி, தொகுதி  பங்கீடு, பிரசாரம் வியூகம் உள்ளிட்ட பணிகளை முழுவீச்சில் செய்து வருகிறது. அதிமுக கூட்டணியில் உள்ள பாஜ, பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் அதிக சீட் கேட்டு அழுத்தம் கொடுத்து வருகிறது.

குறிப்பாக, பாஜ 60 தொகுதிகளை கேட்பதாக கூறப்படுகிறது. அதேபோல், பாஜவுக்கு எவ்வளவு தொகுதிகளை கொடுக்கிறீர்களோ அதே தொகுதிகளை எங்களுக்கும் தர வேண்டும் என்று பாமக நிபந்தனை விதித்துள்ளது.அதே நேரத்தில்  வடமாவட்டங்களில் எங்களுக்கு வாக்கு சதவீதம் அதிகம் உள்ளதால், தங்களுக்கு துணை முதல்வர் பதவி, அதிக தொகுதிகள், தேர்தலுக்கு சில உதவிகள் கேட்டதாக கூறப்படுகிறது. மேலும் வன்னியர்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீட்டை  தேர்தலுக்கு முன்னரே அறிவிக்க வேண்டும் என்றும் நிபந்தனை விதித்து வந்தார். ஆனால், அதிமுக தரப்பில் இருந்து உறுதியான எந்த தகவல்களும் கொடுக்கப்படவில்லை. பாஜக அதிக சீட்டுகளை கேட்பதால், பாமகவுக்கு 20 முதல் 25  தொகுதிகளை ஒதுக்குவதாக அதிமுக தரப்பில் கூறப்பட்டு வந்தது.

இதனால், அதிமுக கூட்டணியில் பாமக தொடர்கிறதா? இல்லையா? என ராமதாஸ் இதுவரை பதில் கூறாமல் மவுனமாக இருந்து வருகிறார். வரும் 31ம் தேதி பாமக பொதுக்குழு கூட்டம் நடக்க உள்ளது. இதில் கூட்டணி குறித்து முக்கிய  முடிவுகள் எடுக்கப்படலாம் என தெரிகிறது. இந்நிலையில், பாமகவுடனான கூட்டணியை உறுதி செய்ய நேற்று மாலை விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாசை மின்சாரத்துறை அமைச்சர்  தங்கமணி, உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் ஆகியோர் சந்தித்து 15 நிமிடம் பேசினர். அப்போது, தங்களுக்கு துணை முதல்வர் பதவி, அதிக தொகுதிகள், தேர்தலுக்கு நாங்கள் எதிர்பார்க்கும் சில உதவிகள் செய்ய வேண்டும்.  வன்னியர்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீட்டை தேர்தலுக்கு முன்னரே செய்ய வேண்டும் என ராமதாஸ் கேட்டதாக கூறப்படுகிறது. அதற்கு, அமைச்சர் உறுதியான எந்த பதிலும் அளிக்கவில்லை.

மேலும், வரும் 27ம் தேதி நடக்கும் அதிமுக பிரசார பொதுக்கூட்டத்தில் கூட்டணி கட்சி தலைவர் என்று முறையில் ராமதாஸ் பங்கேற்ற வேண்டும் என அழைப்பு விடுத்தனர்.அதற்கு ராமதாஸ் தங்களது கோரிக்கைகளை ஏற்றால் மட்டுமே  அடுத்தகட்ட முடிவை அறிவிப்பேன் என கூறி உள்ளார். இருப்பினும், அமைச்சர்கள் ராமதாஸை சமாதானப்படுத்த முயற்சி செய்தனர். ஆனால், அவர் சமாதானத்தை ஏற்க மறுத்துவிட்டார். ஏற்கனவே, வன்னியர்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு  கோரி பாமக நடத்திய போராட்டத்தை ஆட்சியாளர்கள் பெரிய அளவில் கண்டுகொள்ளாததால் கடும் அதிருப்தியில் இருந்துவந்த ராமதாஸ் அமைச்சர்களிடம் கூட்டணி சம்பந்தமாக எந்த சாதகமான பதிலையும் கூறாமல் திருப்பி அனுப்பி  விட்டார். பாமகவுக்கு எத்தனை தொகுதி, எந்நெந்த தொகுதி என எந்த முடிவும் எடுக்காத நிலையில் பிரசார கூட்டத்தில் பங்கேற்க முடியாது என ராமதாஸ் அமைச்சர்களிடம் கூறிவிட்டதாக தெரிகிறது.

கூட்டணி பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால் 2 அமைச்சர்களும் நேராக திண்டிவனம் சென்று சட்டத்துறை அமைச்சர் சி.வி சண்முகத்தை சந்தித்து ஒரு மணி நேரம் ஆலோசனை நடத்திவிட்டு சென்னை சென்றனர். கடந்த லோக்சபா  தேர்தலின்போது பாமகவுடன் கூட்டணி சம்பந்தமான பேச்சுவார்த்தையின் போது முக்கிய பங்காற்றிய சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் இந்த முறை பேச்சுவார்த்தைக்கு போகாமல் ஒதுங்கிவிட்டார்.

கடந்த தேர்தலின்போது விழுப்புரம் லோக்சபா தொகுதியில் பாமக தான் போட்டியிட்டது. அமைச்சர் சண்முகத்தை தான் ராமதாஸ் தொகுதி பொறுப்பாளராக நியமித்திருந்தார். ஆனால் தனது சொந்த ஊர் அடங்கிய தொகுதியில் கூட பாமகவால்  வெற்றிபெற முடியவில்லை. அதிமுகவினர் முழு வீச்சில் தேர்தல் பணியாற்றாததால் தான் பாமக தோல்வி அடைந்ததாக சண்முகம் மீது ராமதாஸ் அதிருப்தியில் இருந்துவந்தார். இதனால் தான் திண்டிவனத்தில் இருந்தபோதும் இந்த முறை  சி.வி சண்முகம் பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ளவில்லை என்றும் கூறப்படுகிறது.



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *