கடலுார் ; கடலுார் மாவட்டத்தில் பண்ருட்டி, திட்டக்குடி அரசு மருத்துவமனைகள் மற்றும் வடலுார் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் செயற்கை சுவாச கருவி பொருத்தப்பட்ட 108 ஆம்புலன்ஸ் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.
தமிழகத்தில் கடந்த 2008ம் ஆண்டு விபத்து, பிரசவம் மற்றும் இதர அவசர மருத்துவ உதவிக்காக 108 ஆம்புலன்ஸ் வாகனச் சேவை துவங்கப்பட்டது. கடலுார் மாவட்டத்தில் 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள் 51 உள்ளது. இதில், பச்சிளங் குழந்தைகளின் உயிர் காக்கும் வசதிகள் கொண்ட ஆம்புலன்ஸ் 2, போக்குவரத்து நெரிசல் மிகுந்த இடங்களில் சுலபமாக செல்ல பயன்படுத்தப்படும் 1 பைக் ஆம்புலன்ஸ் அடங்கும். ஆம்புலன்ஸ்களில் மருத்துவ உபகரணங்களுடன், ஆக்சிஜன் சப்ளை யூனிட், ரத்த அழுத்த கருவி, நாடித் துடிப்பு கருவி வசதிகள் உள்ளன.
குறிப்பாக, ஆக்சிஜன் அளவு, ரத்த அழுத்தம், நாடித் துடிப்பை ஒரே நேரத்தில் துல்லியமாக கண்டறியும் ‘மல்டி பாரா மானிட்டர்’ பொருத்தப்பட்டுள்ளது. கடலுார் மாவட்டத்தில் கடலுார், சிதம்பரம், விருத்தாசலம், வேப்பூர் உள்ளிட்ட அரசு மருத்துவமனைகளில் தலா ஒரு அதிநவீன சிகிச்சை ஆம்புலன்ஸ் உள்ளது. இந்த ஆம்புலன்ஸ்களில் வழக்கமான உபகரணங்களுடன் ஆபத்தான நிலையில் சிகிச்சைக்கு வருவோரை காப்பாற்ற செயற்கை சுவாச கருவி (வெண்டிலேட்டர்) பொருத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், பண்ருட்டி, திட்டக்குடி அரசு மருத்துவமனைகள், வடலுார் ஆரம்ப சுகாதார நிலையத்திலும் செயற்கை சுவாச கருவி பொருத்தப்பட்ட அதிநவீன ஆம்புலன்ஸ் பயன்பாட்டிற்கு வந்துள்ளது
இது குறித்து 108 ஆம்புலன்ஸ் மைய அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘பண்ருட்டி பகுதியில் ஆபத்தான நிலையில் சிகிச்சைக்கு வருவோரை கடலுார் அல்லது விழுப்புரம் அரசு மருத்துவமனைக்கு மேல்சிகிச்சைக்காக அனுப்ப பண்ருட்டி அரசு மருத்துவமனையில் செயற்கை சுவாச கருவியுடன் ஆம்புலன்ஸ் நிறுத்தப்பட்டுள்ளது. திட்டக்குடி பகுதி மக்களை விருத்தாசலம், பெரம்பலுார் அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்கு கொண்டு செல்ல திட்டக்குடி அரசு மருத்துவமனையில் செயற்கை சுவாச கருவியுடன் ஆம்புலன்ஸ் நிறுத்தப்பட்டுள்ளது.
வடலுார் பகுதி மக்களை கடலுார் அல்லது விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு மேல்சிகிச்சைக்கு கொண்டு செல்ல வடலுார் ஆரம்ப சுகாதார நிலையத்தில் செயற்கை சுவாச கருவியுடன் ஆம்புலன்ஸ் நிறுத்தப்பட்டுள்ளது’ என்றார்.
Advertisement