Share on Social Media

90-களின் கிரிக்கெட் அவ்வளவு அழகு. ஒவ்வொரு கிரிக்கெட்டரையும் அவர்கள் அடிக்கும் ரன்கள், அவர்கள் எடுக்கும் விக்கெட்டுகளுக்காக அல்ல, அவர்களின் ஸ்டைலுக்காக, களத்தில் அவர்களின் மேனரிசங்களுக்காகவே ரொம்பவும் ரசித்துப் பார்த்த காலம் அது.

ஒவ்வொரு வீரரிடமும் தனித்துவமான ஒரு ஸ்டைல் இருக்கும். தெருவில் விளையாடும்போது பார்த்தால் டிவியில் பார்க்கும் அதே வீரரின் மேனரிசங்களோடு நம்மிடையேயும் பலர் விளையாடிக் கொண்டிருப்பார்கள். சச்சின், லாரா தொடங்கி வாசிம், டொனால்ட், ஷான் பொல்லாக், ஶ்ரீநாத்கள் வரை நம் கல்லி கிரிக்கெட்டில் இருப்பார்கள். இந்த லிஸ்ட்டில் மிக முக்கியமானவர் கார்ல் ஹூப்பர்.

வட்ட வடிவ பழையகால தொப்பி அணிந்தபடி கிரிக்கெட் ஆடி நாம் பார்த்த கடைசி கிரிக்கெட்டர் இவராகத்தான் இருப்பார். ஹெல்மெட் போட்டாலும் கிரில் இல்லாத ஹெல்மெட்தான். அவர் ஒருமுறைகூட கிரில் வைத்த ஹெல்மெட் போட்டு ஆடியதாக நினைவில்லை. அதேபோல் இவரது பெளலிங் ஆக்‌ஷனும் தனித்துவமானது. ஆஃப் ஸ்பின்னர்தான். ஆனால், யார்க்கர்களை நச்சென வீசுவார். ஸ்பின் போடுகிறாரா, பேஸ் போடுகிறாரா என்பதே சில நேரங்களில் தெரியாது. ஸ்டம்புகள் தெறிக்கும் வேகத்தைப் பார்த்துத்தான் தலைவன் வெறிகொண்டு பந்து வீசியிருக்கிறான் என்பது புரியும்.

carl hooper

Effortless என்று சொல்வார்களே… அப்படி ஒரு எஃபர்ட்லஸ் பேட்ஸ்மேன். 90-களில் இங்கிலாந்து, ஆஸ்திரேலிய கிரிக்கெட் மைதானங்கள் மிகவும் பெரிதாக இருக்கும். அந்த மைதானங்களிலேயே இவர் ஜஸ்ட் லைக் தட் அடிக்கும் ஷாட்கள் எல்லாம் சிக்ஸர் பறக்கும். அந்த அளவுக்கு இவரின் பேட்டில் அனல் பறக்கும். வாசிம் அக்ரம், வக்கார் யூனுஸ், டொனால்ட், பொல்லாக் என இவர் போட்டுப் பொளக்காத பெளலர்களே இல்லை.

வெற்றி, தோல்வியைத் தீர்மானிக்கும் ஆட்டத்தின் பரபரப்பான கட்டத்தில்கூட இவர் முகத்தில் ஒரு துளி டென்ஷனைக்கூடப் பார்க்கமுடியாது. பபுள்கம் மென்றபடி முகத்தில் எந்த ரியாக்‌ஷனும் இல்லாமல் இருப்பார். ஆனால், இவரின் ரியாக்‌ஷன் இல்லா முகத்துக்குப் பின்னால் ஒரு சோகமும் ஒளிந்திருக்கும். அந்த சோகத்துக்கு காரணமும் உண்டு.

கரிபியன் கிரிக்கெட்டின் பொற்காலம், போதாதகாலம் என இரண்டையும் பார்த்தவர் கார்ல் ஹூப்பர். துரதிஷ்டவசமாக ஒரு அணியாக இல்லாமல் சிதறுண்டு போயிருந்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு 2000-ங்களில் கேப்டனாகவும் இருந்தார் கார்ல். 1987-ல் விவியன் ரிச்சர்ட்ஸ், கார்டன் கிரீனிட்ஜ், டெஸ்மாண்ட் ஹேய்ன்ஸ் என லெஜண்ட்கள் நிரம்பியிருந்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்குள் நுழைந்தவர் கார்ல் ஹூப்பர்.

இவர் விளையாடிய முதல் டெஸ்ட் தொடர் இந்தியாவுக்கு எதிராகத்தான் நிகழ்ந்தது. கொல்கத்தாவில் நடைபெற்ற இவரின் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இவர் சரியாக 100 ரன்கள் அடித்ததும் டிக்ளேர் செய்தார் வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் விவியன் ரிச்சர்ட்ஸ்.

கேப்டனாகவே ஓய்வுபெற்ற இவரது கடைசி டெஸ்ட் போட்டியும் இந்தியாவுக்கு எதிராகத்தான் நடந்தது. 2002-ம் ஆண்டு அதே கொல்கத்தா மைதானத்தில்தான் இந்தப்போட்டியும் நடந்தது. இதே ஆண்டில் ஓய்வுக்கு சில மாதங்களுக்கு முன்பாக வெஸ்ட் இண்டீஸுக்கு வந்திருந்த இந்திய அணிக்கு எதிராக 233 ரன்கள் குவித்தார் கார்ல் ஹூப்பர். ஒரு பேட்ஸ்மேனாக கார்ல் ஹூப்பரின் அதிகபட்ச ரன்கள் இதுதான். அப்போது அவருக்கு வயது 36. கிட்டத்தட்ட 11 மணி நேரம் களத்தில் நின்று ஶ்ரீநாத், கும்ப்ளே, ஜாகிர் கான், செளரவ் கங்குலி, சச்சின் டெண்டுல்கர் என எல்லோருடைய பந்துகளையும் சந்தித்து களமாடினார் கார்ல் ஹூப்பர். 29 பவுண்டரி, 3 சிக்ஸர்.

48365955 2320438091308607 7870686707048251392 n Tamil News Spot
கார்ல் ஹூப்பர்

கிட்டத்தட்ட 40 டெஸ்ட் போட்டிகள், நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு வெஸ்ட் இண்டீஸ் அணி 500 ரன்களுக்கு மேல் குவித்த டெஸ்ட் போட்டி இதுதான். 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட இத்தொடரில் கார்ல் ஹூப்பர் ஒரு இரட்டை சதம், ஒரு சதம் என மொத்தம் 579 ரன்கள் குவித்தார். இந்த சீரிஸின் டாப் பேட்ஸ்மேன் ஹூப்பர்தான். பல ஆண்டுகளுக்குப்பிறகு 2-1 வெஸ்ட் இண்டீஸ் தொடரையும் வென்றது.

இந்தத் தொடர் கார்ல் ஹூப்பரின் வாழ்க்கையில் மிக முக்கியமானது. ஏன் என்றால் 1999-ல் திடீரென கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்தவர் ஹூப்பர். அதுவும் 1999-ல் இங்கிலாந்தில் நடைபெற இருந்த உலகக் கோப்பை தொடர் தொடங்குவதற்கு சில வாரங்களுக்கு முன்பாக ஓய்வை அறிவித்தார். அப்போது அவருக்கு வயது 33. மேற்கு இந்திய கிரிக்கெட்டின் மேலாளராக இருந்த முன்னாள் கேப்டன் க்ளைவ் லாயிட், ‘’எனக்கு இது பேரதிர்ச்சி. உலகக் கோப்பைக்கு இன்னும் சில வாரங்களே இருக்கும் நிலையில் ஹூப்பர் இப்படி ஒரு முடிவு எடுப்பார் என எதிர்பார்க்கவேயில்லை’’ என்றார் லாயிட். அப்போதைய வெஸ்ட் இண்டீஸ் அணி மிகவும் தடுமாற்றத்தில் இருந்தது. திடீரென கார்ல் ஹூப்பரின் இடத்துக்கு ஒரு சரியான மாற்று ஆல்ரவுண்டரை எப்படித் தேடுவது என்பது அவர்களது கவலையாக இருந்ததால் ஹூப்பரை எல்லோருமே சுயநலவாதி என்று திட்டினார்கள். அப்போது கார்ல் ஹூப்பர் ஏன் திடீரென ஓய்வுபெறுகிறார் என யாருக்கும் தெரியவில்லை.

1987-ல் அணிக்குள் வந்த கார்ல் ஹூப்பர், அந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற உலகக்கோப்பைத் தொடரில் மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்காக விளையாடினார். அப்போது மேற்கு இந்திய அணியின் பேட்டிங் ஆர்டர் மிகவும் வலுவாக இருந்ததால் பெரும்பாலும் இவருக்கு பேட்டிங் ஆடும் வாய்ப்பு கிடைக்காது. ஆனால், எல்லா போட்டிகளிலும் பந்துவீசிவிடுவார். அந்தத் தொடரில் 6 விக்கெட்களும் எடுத்திருந்தார். ஆனால், 1992 ஆஸ்திரேலியாவில் நடந்த உலகக்கோப்பையில் கார்ல் ஹூப்பரால் பேட்டிங் ஆடும் வாய்ப்பு கிடைத்தும், பெளலிங் போடும் வாய்ப்பு கிடைத்தும் சரியாக பர்ஃபார்ம் செய்யமுடியவில்லை. இதனால் ஒருவித விரக்தி மனநிலையில் ஆடிக்கொண்டிருந்த கார்ல் ஹூப்பர், 1995-ம் ஆண்டின்போது மன அழுத்தம் காரணமாக ஓய்வுவேண்டும் என கரீபியன் கிரிக்கெட் நிர்வாகத்திடம் அனுமதி கேட்டார்.

131580029 4049558065063259 2264233471171200804 n Tamil News Spot
கார்ல் ஹூப்பர்

90-களில் மன அழுத்தம் இருப்பதை வெளிப்படையாகச் சொல்லி ஓய்வுகேட்ட ஒரு சில வீரர்களில் கார்ல் ஹூப்பர் குறிப்பிடப்படவேண்டியவர். ஆனால், அவரின் கோரிக்கையை புறக்கணித்தது வெஸ்ட் இண்டீஸ் நிர்வாகம். இதனால் 1996-ல் இந்தியாவில் நடைபெற இருந்த உலகக் கோப்பைக்கு முன்னதாக அணியில் இருந்து விலகிக்கொண்டார், விலக்கப்பட்டார். இந்த சூழலில்தான் 1999 உலகக்கோப்பை தொடங்குவதற்கு முன்பாக திடீரென கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

கார்ல் ஹூப்பர் ஓய்வு பெறுவதாக அறிவித்தாலும் அவர் திரும்ப விளையாட வருவார் என்றே பலரும் எதிர்பார்த்தார்கள். நினைத்தது போலவே கிட்டத்தட்ட 18 மாதங்கள் கழித்துதான் சர்வதேச கிரிக்கெட்டுக்கு திரும்பினார் கார்ல் ஹூப்பர். அப்போதுதான் திடீரென ஓய்வுபெற்றதற்கான காரணத்தையும் சொன்னார். ‘’என் மனைவி ஆஸ்திரேலியர். இரண்டு ஆண்டுகால திருமண வாழ்க்கைக்குப்பிறகு எனக்கு அப்போதுதான் குழந்தை பிறந்தது. ஆனால், குறை பிரசவத்தில் குழந்தை பிறந்தது. மனைவி குழந்தையைப் பார்த்துக் கொள்வதற்கு மிகவும் சிரமப்பட்டார். அவருக்கு மிகுந்த மன நெருக்கடி உருவானது. ஆஸ்திரேலியாவில் தனியாக இருந்தார். அந்தச் சூழலில் மனைவியோடு இருப்பதுதான் எனக்கு சரியெனப்பட்டது. வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் போர்டிடம் சில மாத விடுப்புதான் கேட்டேன். ஆனால், அது கிடைக்கவில்லை. எனவே ஓய்வை அறிவித்துவிட்டேன்’’ என்று விளக்கமளித்தார் ஹூப்பர்.

‘’ஓய்வை அறிவித்துவிட்டு ஆஸ்திரேலியாவுக்குப் போய்விட்டேன். ஆனால், என்னுடைய அணியினரிடம் இருந்து ‘ஹூப்பர், நீ எப்படி இருக்கிறாய்’ என ஒரு போன் விசாரிப்பு கூட இல்லை. என் போன் ஒலிக்கவே இல்லை. ஆனால், அந்தக் காலகட்டத்தில் எனக்கு ஒரே ஒருவர் மட்டும் போன் செய்தார். அவர் பிரையன் லாரா. ‘நீ எப்போது ரீ- என்ட்ரி கொடுக்கப்போகிறாய் கார்ல்’ என என் மேல் நம்பிக்கை வைத்துக் கேட்டார். அப்போது அவர்தான் வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன். லாராவின் அழைப்பு எனக்கு மிகவும் முக்கியமானதாக இருந்தது’’ என்று ஓய்வுகால மனப்போராட்டத்தைப் பற்றிச் சொல்லியிருக்கிறார் ஹூப்பர்.

247717 Tamil News Spot
கார்ல் ஹூப்பர், பிரையன் லாரா

கார்ல் ஹூப்பரை ஓய்வு அறிவிப்பு வெளியிடவைத்து தவறிழைத்த வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் போர்டு தன்னுடைய தவற்றை சரிசெய்வதுபோல, ஹூப்பரை ரீ- என்ட்ரியிலேயே கேப்டன் ஆக்கியது. இதற்கு சரியான காரணமும் அவர்களிடம் இருந்தது. ஆஸ்திரேலியாவில் இருந்து கரீபியன் தீவுக்குத் திரும்பிய கார்ல் ஹூப்பர், 2000-ம்களில் மீண்டும் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் கயானாவுக்காக விளையாடினார். 9 போட்டிகளில் 954 ரன்கள் குவித்து 25 விக்கெட்டுகளையும் எடுத்தார் கார்ல். இதனால் இவரை மீண்டும் அணிக்குள் எடுத்து கேப்டன்ஸியையும் கையில் கொடுத்தது வெஸ்ட் இண்டீஸ் போர்டு.

கார்ல் ஹூப்பரின் 2.0 வெர்ஷன் முந்தைய வெர்ஷனை விட மிகச் சிறப்பாக இருந்தது. 1999-ல் ஓய்வு அறிவிப்பை வெளியிட்டபோது 80 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 4,153 ரன்கள் அடித்திருந்தார். ஆவரேஜ் 36. பெளலராக 93 விக்கெட்டுகள் எடுத்திருந்தார். ஆனால், 2001-ல் ரீ என்ட்ரி கொடுத்தபோது 22 டெஸ்ட்களில் விளையாடி 1609 ரன்கள் குவித்தார். ஆவரேஜ் 47. இந்த 22 டெஸ்ட்களில் 21 விக்கெட்களும் எடுத்தார். ஒருநாள் போட்டிகளில் 45 போட்டிகளுக்குத் தலைமையேற்று விளையாடினார். ஆனால், மேற்கு இந்தியத்தீவு அணியை அவரால் ஒரே அணியாகக் கட்டமைக்க முடியவில்லை. 2003 உலகக்கோப்பை தோல்வியோடு கார்ல் ஹூப்பர் தனது ஓய்வு அறிவிப்பை வெளியிட்டார்.

Hooper Tamil News Spot
கார்ல் ஹூப்பர்

கார்ல் ஹூப்பர் மீது எப்போதும் வைக்கப்படும் விமர்சனம் அவர் வாய்ப்புகளைச் சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை என்பதுதான். ஆனால், உண்மையில் 102 டெஸ்ட், 227 ஒருநாள் போட்டிகளில் விளையாடி மொத்தமாக 11,523 ரன்கள், 307 விக்கெட்கள் எடுத்திருக்கிறார் கார்ல் ஹூப்பர். முதன்முதலில் டெஸ்ட், ஒருநாள் என இரண்டு ஃபார்மேட்டிலுமே 100 போட்டிகளுக்கு மேல் விளையாடி, 5000 ரன்களுக்கு மேல் அடித்து, 100 விக்கெட்டுகளுக்கு மேல் எடுத்து, 100 கேட்சுகளுக்கு மேல் பிடித்த வீரர் கார்ல் ஹூப்பர்தான். இவருக்கு அடுத்து இந்தச் சாதனையை செய்திருக்கும் இன்னொரு வீரர் தென்னாப்பிரிக்காவின் ஜாக் காலிஸ் மட்டுமே.

Also Read: அண்டர் ஆர்ம்ஸ் – 23: க்ரீஸ் அருகே ஒரு துள்ளல், அந்தத் துல்லியம்… ஷான் பொல்லாக்கை மறக்கமுடியுமா?!

களத்தில் இருக்கும் போதெல்லாம் அணிக்காக பங்களிக்கக்கூடிய வீரர்கள் என ஒரு சிலர்தான் இருக்கிறார்கள். அதில் முக்கியமானவர் ஹுப்பர். பேட்டிங், பெளலிங் தவிர்த்து அற்புதமான ஃபீல்டர். கவரோ, ஸ்லிப்போ பறந்து பறந்து கேட்ச் பிடிப்பதாக இருக்கட்டும், துல்லியமான ரன் அவுட்களாக இருக்கட்டும் ஹுப்பர்தான் பெஸ்ட்.

95929711 3366470866705319 6155322003621412864 n Tamil News Spot
கார்ல் ஹூப்பர்

க்ளைவ் லாயிட், விவியன் ரிச்சர்ட்ஸ், கார்டன் கிரீனிட்ஜ், டெஸ்ட்மாண்ட் ஹெய்ன்ஸ், கார்ட்னி வால்ஷ், பிரையன் லாரா, சந்தர்பால், கிறிஸ் கெய்ல் என இந்த எட்டு பேருக்கு அடுத்து 100 டெஸ்ட் போட்டிகளுக்கு மேல் விளையாடியிருக்கும் 9-வது வீரர் கார்ல் ஹுப்பர்தான்.

சமீபத்தில் ஐசிசி நடத்திய கருத்துகணிப்பில், ‘’எந்த கிரிக்கெட் வீரரை இமிடேட் செய்து விளையாட விரும்புகிறீர்கள்’’ என கேட்டதற்கு அதிகளவில் கார்ல் ஹூப்பர் பெயரைத்தான் பலரும் குறிப்பிட்டிருந்தார்கள்.

ஹூப்பர் கிரிக்கெட்டில் இருந்து விலகி கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் நிறைவடைய இருக்கின்றன. ஆனால், இன்னமும் ரசிகர்களின் மனதில் ஹூப்பரின் நினைவுகள் அப்படியே இருக்கிறது என்பதற்கான சாட்சிதான் இது. ரசிகர்களுக்கு அவர் எப்போதும் ‘Sir’ கார்ல் ஹூப்பர்தான்!

Thanks for the source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *