Share on Social Media


சென்னை : ஊரக உள்ளாட்சி தேர்தலின் இரண்டாம் கட்ட ஓட்டுப்பதிவில், சென்னை புறநகரை ஒட்டியுள்ள ஊராட்சிகளில், அடிதடி, மண்டை உடைப்பு என, ரகளையுடன் நடந்து முடிந்தது.

பெரும்பாலான ஊராட்சிகளில், மக்கள் ஆர்வத்துடன் ஓட்டு போட வந்ததால், ஓட்டுச்சாவடிகளில் கூட்டம் நிரம்பி வழிந்தது.விடுபட்ட மாவட்டங்களுக்கான, ஊரக உள்ளாட்சி தேர்தல், இரண்டு கட்டமாக நடந்து முடிந்துள்ளது. முதல்கட்ட ஓட்டுப்பதிவு, 6ம் தேதி முடிவடைந்த நிலையில், இரண்டாம் கட்டமாக , காஞ்சிபுரம் மாவட்டத்தில் இரண்டு ஒன்றியங்கள், செங்கல்பட்டு மாவட்டத்தில் நான்கு ஒன்றியங்களில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும், நேற்று ஓட்டுப்பதிவு நடந்தது.வாக்குவாதம்இதில், காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்துார் ஒன்றியத்திற்குட்பட்ட, 15 ஊராட்சிகள், சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும எல்லையில் உள்ளன.

இந்த ஊராட்சிகளில், நேற்று இரண்டாம் கட்ட ஓட்டுப்பதிவு விறுவிறுப்பாக நடந்தது. வாக்காளர்கள் ஆர்வத்துடன் நீண்ட வரிசையில் நின்று ஓட்டளித்தனர்.பழந்தண்டலம், திருமுடிவாக்கம், நந்தம்பாக்கம், சிறுகளத்துார், கொல்லச்சேரி, சிக்கராயபுரம், பரணிபுத்துார், மவுலிவாக்கம், கொளப்பாக்கம், கெருகம்பாக்கம், தரப்பாக்கம், பெரியபணிச்சேரி, கோவூர், இரண்டாம் கட்டளை, கொழுமுனிவாக்கம் ஆகிய 15 ஊராட்சிகளில் ஓட்டுப்பதிவு நடந்து முடிந்தது.கொளப்பாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளி ஓட்டுச்சாவடி மையத்தில், சக்கர நாற்காலி வசதி இல்லாததால், நடக்க முடியாதவர்கள் சிரமப்பட்டனர்.

அவர்களை அழைத்து சென்ற வாகனங்களை உள்ளே அனுமதிக்காததால், போலீசாருடன் வாக்காளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.அதன் பின், சக்கர நாற்காலிகள் கொண்டு வரப்பட்டு, முதியவர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர். கெருகம்பாக்கத்திலும், போலீசாருக்கும், வாக்காளர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. கொல்லச்சேரி அரசு தொடக்கப் பள்ளியில் ஓட்டுபோட்ட, ஸ்ரீ பெரும்புதுார் முன்னாள் அ.தி.மு.க., – எம்.எல்.ஏ., பழனி, ஓட்டு இயந்திரத்தை தொட்டு வணங்கினார்.ஓட்டுச்சாவடிகள் வெளியே நின்றிருந்த அ.தி.மு.க., – தி.மு.க.,வினர், போட்டி போட்டு, வாக்காளர்களிடம், தங்கள் கட்சி சின்னங்களை காண்பித்து, ஓட்டுச்சாவடிக்கு வெளியே ஓட்டு சேகரித்தனர்.

இதை கண்டிக்க வேண்டிய போலீசார், கைகட்டி வேடிக்கை பார்த்தனர்.கைகலப்புசில இடங்களில் மதியம், 2:00 மணிக்கு மேல், கூட்டம் அதிகமாக காணப்பட்டது. அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தடுக்க, பதற்றமான ஓட்டு சாவடிகள் உள்ளிட்ட இடங்களில், நுாற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.கெருகம்பாக்கம் ஊராட்சி, ஒன்பதாவது வார்டு உறுப்பினர் பதவிக்கு, தி.மு.க., சார்பில் காசி, அ.ம.மு.க., சார்பில் மகாலிங்கம் போட்டியிடுகின்றனர்.இந்திரா நகர் அரசு பள்ளியில் இதற்கான ஓட்டுப்பதிவு நடந்தது. காலை முதல் விறுவிறுப்பாக ஓட்டுப்பதிவு நடந்து வந்த நிலையில், மாலையில், ஓட்டுச்சாவடி மையத்தில் பெண் ஒருவர், வாக்காளர்களுக்கு ‘சானிடைசர்’ மற்றும் காய்ச்சல் பரிசோதனை செய்து கொண்டுஇருந்தார்.அப்போது அங்கு வந்த அ.ம.மு.க., நிர்வாகி ஒருவர், அந்த பெண்ணிடம், ‘யாரை கேட்டு இதுபோல் செய்கிறாய்?’ என, கேட்டதாக தெரிகிறது.இதனால், இரு தரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. சிறிது நேரத்தில், கைகலப்பு ஏற்பட்டது.

தி.மு.க., – அ.ம.மு.க., தரப்பினர், மாறி மாறி தாக்கிக்கொன்டனர். மிளகாய் துாள், செங்கல், கட்டை ஆகியவற்றை ஒருவர் மீது ஒருவர் வீசினர்.போர்க்களம்இதில், ஒருவருக்கு மண்டை உடைந்தது; 10க்கும் மேற்பட்டோருக்கு ரத்த காயம் ஏற்பட்டது. தகராறில், சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களும் சேதமடைந்தன. அப்பகுதியே போர்க்களம் போல் மாறியதால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது. வாக்காளர்கள் சிதறி ஓடினர். போலீசார் விரைந்து, இரு தரப்பினரையும் அப்புறப்படுத்தினர்.காயமடைந்தவர்களை மீட்டு, அருகேயுள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பினர். இச்சம்பவத்தால், அரை மணி நேரம் ஓட்டுப்பதிவு பாதிக்கப்பட்டது. பின், நிலைமை சீரானதை அடுத்து, மீண்டும் ஓட்டுப்பதிவு துவங்கியது.

மீண்டும் தகராறு ஏற்படாமல் இருக்க, அங்கு, ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.கொல்லச்சேரியில் மறியல்!கொல்லச்சேரி ஊராட்சியில், தி.மு.க., சார்பில், ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிடுபவர், நேற்று முன்தினம் இரவு, அப்பகுதியில் உள்ள வாக்காளர்களுக்கு தங்க மூக்குத்திகள் வழங்கியதாக தகவல் பரவியது. அ.தி.மு.க.,வினர் சென்றபோது, தி.மு.க.,வினர் ஓடிவிட்டனர். மூக்குத்திகளை பறிமுதல் செய்த அ.தி.மு.க.,வினர், திடீர் மறியலில் ஈடுபட்டனர். போலீசார் விரைந்து சென்று பேச்சு நடத்தியதை அடுத்து கலைந்தனர். இதனால், நேற்று முன்தினம் இரவு அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *