இந்தியாவில், ஒமைக்ரான் தனது ஆட்டத்தைத் தொடங்கிவிட்டது. தென் ஆப்பிரிக்காலிருந்து இந்தியா வந்திருந்த நபரின் மூலம் ஒமைக்ரான் முதன்முதலில் கர்நாடகா மாநிலத்தில் அடியெடுத்துவைத்ததாக சில தினங்களுக்கு முன்பு கண்டறியப்பட்டது. ஆனால், மகாராஷ்டிரா, உத்தரப்பிரதேசம் என அடுத்தடுத்து ஒவ்வொரு மாநிலங்களிலும் ஒமைக்ரான் ஏற்கெனவே தன் கணக்கை ஆரம்பித்துவிட்ட புள்ளிவிவரங்கள் தெரியவர… 2022-ல் அடுத்ததொரு பெருந்தொற்றை எதிர்கொள்ள வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டிருக்கிறது நாடு.
அதேசமயம், ஒமைக்ரான் பாதிப்புகள் குறித்துப் பேசுகிற மருத்துவ உலகம் ‘இதுகுறித்து அச்சம் கொள்ளத் தேவையில்லை’ என்கிற ரீதியில் ஆறுதல் அளித்துவருகிறது. ‘தமிழ்நாட்டில் இதுவரை யாருக்கும் ஒமைக்ரான் பாதிப்பு ஏற்படவில்லை’ எனத் தொடரும் அறிவிப்பு கூடுதல் ஆறுதல் அளிக்கிறது. அதேசமயம், இந்த அறிவிப்பின் பின்னணியில் இருக்கும் உண்மைத்தன்மை குறித்துப் பல்வேறு சந்தேகங்கள் எழுப்பப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், ஒமைக்ரான் வைரஸ் பாதிப்புகளை எதிர்கொள்ள தமிழ்நாடு தயாராக இருக்கிறதா என்ற கேள்விக்குப் பதிலளித்துப் பேசுகிற சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையின் டீன் டாக்டர் தேரணி ராஜன், ”உலகளவில், ஒமைக்ரான் பாதிப்பு என்பது ஆரம்பக் கட்டத்தில்தான் இருக்கிறது. எனவே, இந்த வைரஸ் ஏற்படுத்துகிற பாதிப்புகளை முழுமையாகக் கண்டறியவும் வைரஸைக் கட்டுப்படுத்துவதற்கான மருந்தைக் கண்டுபிடிப்பதற்கும் இன்னும் சில வாரங்கள் தேவைப்படும்.
இதுவரை கண்டறியப்பட்டுள்ள ஆய்வின்படி, ஒமைக்ரான் வகை வைரஸால் பெரியளவில் பாதிப்புகள் இல்லை என்றே தெரியவருகிறது. எனவே இதுகுறித்து பெரியளவில் பீதியடையத் தேவையில்லை. ஆனாலும்கூட, கொரோனாவை தடுப்பதற்கான பாதுகாப்பு வழிமுறைகளைக் கடைப்பிடிப்பதில் எந்தவித அலட்சியமும் காட்டக்கூடாது.
தமிழ்நாட்டில், மருத்துவக் கட்டமைப்பு ஏற்கெனவே வலுவானதாகத்தான் இருக்கிறது. எனவே, ஒமைக்ரான் பாதிப்புக்காக மருத்துவ உள் கட்டமைப்பு வசதிகளை நாம் மாற்றியமைக்கவில்லை. தமிழ்நாட்டில் இதுவரை ஒமைக்ரான் பாதிப்பும் இல்லை.
ஆனாலும்கூட சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையின் மூன்றாவது மாடியில் 150 படுக்கைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. அதில் 50 படுக்கைகள் ஐ.சியூ வசதியுடன் கூடியவை. ஏற்கெனவே கொரோனாவை எதிர்கொண்டுவருவதில் நமக்கு அனுபவமும் உள்ளது. இதுதவிர ஏற்கெனவே 80 % பேருக்கு தமிழ்நாட்டில் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. அதில், 50% பேர் இரண்டாவது தவணை தடுப்பூசியையும் செலுத்திக்கொண்டவர்கள். எனவே நாம் பயம் கொள்ளத் தேவையில்லை. அதேசமயம், முகக் கவசம், கிருமிநாசினி, தனி மனித இடைவெளி என்று கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளையும் தவறாது கடைப்பிடிக்க வேண்டியது அவசியம்!” என்கிறார் அழுத்தமாக.

இந்திய அளவில் ஒமைக்ரான் பாதிப்பு எண்ணிக்கை 21-ஐ தொட்டுவிட்ட நிலையில், இந்தப் பெருந்தொற்றை எதிர்கொள்வதற்கு இந்தியா எந்த அளவில் தயார் நிலையில் இருப்பதாக நினைக்கிறீர்கள் என்றக் கேள்வியை தமிழக காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் கோபண்ணாவிடம் கேட்டபோது,
”கடந்த இரண்டு ஆண்டுகளாகவே நாம் கொரோனா பாதிப்பில்தான் இருந்துவருகிறோம். மருத்துவமனைகளில், போதிய எண்ணிக்கைகளில் படுக்கைகள் இல்லாதது, அவசர சிகிச்சைப் பிரிவில் ஆக்சிஜன் தேவையை பூர்த்தி செய்ய முடியாதது என அடிப்படைக் கட்டமைப்புகளை செய்யத் தவறியதால், கடந்தகால கொரோனாவில் எண்ணற்ற உயிர்களை பலிகொடுக்க நேர்ந்தது.
இதுவரையிலும் கொரோனா உயிரிழப்பு என்று ஒன்றிய அரசு அறிவித்துள்ள எண்ணிக்கையிலிருந்து 5 மடங்கு கூடுதலான எண்ணிக்கையில் உயிரிழப்புகள் நேர்ந்துள்ளன என்று ராகுல்காந்தி குற்றச்சாட்டை முன்வைத்திருக்கிறார். ஆனாலும் ஒன்றிய அரசு இதுவரை இதற்கான பதிலை, விளக்கத்தைத் தெரிவிக்கவேயில்லை.
Also Read: முல்லைப்பெரியாறு: ஜான் பென்னிகுயிக்கை இழிவுபடுத்தும் கேரளா; கொந்தளிக்கும் தமிழக விவசாயிகள்!
இந்த நிலையில்தான், அடுத்தப் பெருந்தொற்றாக ஒமைக்ரான் என்ற உருமாறிய கொரோனா வைரஸ் இந்தியாவுக்குப் படையெடுத்துள்ளது. கடந்தகால கொரோனா அனுபவத்திலிருந்து ஒன்றிய பா.ஜ.க ஒன்றையும் கற்றுக்கொள்ளவில்லை என்பது ஒமைக்ரான் பாதிப்பின் ஆரம்பக் கட்டத்திலேயே தெளிவாகிறது. இதுவரையிலும் சர்வதேச விமானப் போக்குவரத்து இந்தியாவில் தடை செய்யப்படவில்லை. கடந்த காலத்திலும் இதே தவறைச் செய்ததால்தான், கொரோனா பெருந்தொற்று நாடு முழுக்க பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. பிரதமர் நரேந்திர மோடி, நிறைய பேசுகிறார். ஆனால், செயலில் பெருத்த ஏமாற்றம்தான் மிஞ்சுகிறது” என்கிறார் ஏமாற்றத்துடன்.
இதையடுத்து, இந்திய அளவில் ஒமைக்ரான் பாதிப்புகளை எதிர்கொள்ள மத்திய பா.ஜ.க அரசு எந்தளவு தயார் நிலையில் இருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ளும் நோக்கில், தமிழக பா.ஜ.க செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதியிடம் பேசியபோது, ”மத்திய அரசு வெளியிடும் அறிவிப்புகளையோ, குறிப்புகளையோ அல்லது ஊடக செய்திகளையோ எதிர்க்கட்சியினர் படிப்பது இல்லை என்பது மிகத்தெளிவாகத் தெரிகிறது. இது வழக்கமானதுதான்.

கடந்த பத்துப் பதினைந்து நாள்களாகவே ‘ஒமைக்ரான் பாதிப்புகளை எப்படி எதிர்கொள்வது’ என்பது குறித்து முழு முயற்சிகளையும் பிரதமர், அமைச்சரவையினர் மற்றும் அதிகாரிகள் எடுத்து வருகின்றனர். எந்தெந்த நாட்டிலிருந்து வரும் விமானப் போக்குவரத்தையெல்லாம் தடை செய்யலாம் என்பது குறித்தும் ஆய்வு செய்துகொண்டிருக்கின்றனர்.
உள்நாட்டிலும்கூட விமான நிலையங்களில் முழுமையான கண்காணிப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இதன் தொடர்ச்சியாக எந்தெந்த விமான நிலையங்களில் எத்தனை தொற்றுகள் கண்டறியப்பட்டுள்ளன என்ற விபரமும் தொடர்ந்து அறிக்கைகளாக வெளிவந்துகொண்டிருக்கின்றன.
தமிழ்நாடு உட்பட அனைத்து மாநிலங்களிலும் மருத்துவமனைகளும், மருத்துவர்களும், சுகாதாரத் துறையினரும் விழிப்புணர்வோடு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ள செய்திகள் எல்லாம் தினந்தோறும் ஊடகங்கள் வாயிலாக செய்திகளாக வெளிவந்து கொண்டிருக்கின்றன. இவை எவற்றையுமே படித்தறியாமல், தெரிந்துகொள்ள முனையாமல் வெறும் அரசியல் லாபத்துக்காக மலிவான விமர்சனங்களை எதிர்க்கட்சிகள் வைத்துக்கொண்டிருப்பதுதான் ஆகப் பெருந்தொற்று!” என்கிறார் ஒரே போடாக.